சாவகச்சேரி நீதிமன்றப் பதிவாளரை பணியை செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படும் இயற்றாலைப் பகுதியினைச் சேர்ந்த ஐந்து பெண்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி மாவட்ட நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் உத்தரவிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் இயற்றாலைப் பகுதியிலுள்ள காணியொற்றிற்கு எல்லை அமைத்தல் தொடர்பான வழக்கு ஜுன் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதற்கு நீதவான் மாவட்ட நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் குறித்த காணிக்கு எல்லை போடும்படி உத்தரவிட்டார்.
அதற்கிணங்க காணி உரிமையாளர், கடந்த ஜுன் 30 ஆம் திகதி மாவட்ட நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் எல்லை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டவேளை, அங்கு வந்த 5 பெண்கள் எல்லை அமைக்கவிடாமல் தடுத்ததுடன், எல்லை அமைக்கும் பகுதியில் படுத்துக்கொண்டனர்.
இந்நிலையில் மாவட்ட நீதிமன்ற பதிவாளர், மேற்படி பெண்களுக்கு எதிராக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 ஆம் திகதி முறைப்பாடு செய்தார்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம் 5 பெண்களையும் கடந்த செவ்வாய்க்கிழமை (08) கைது செய்த கொடிகாமம் பொலிஸார், அவர்களை புதன்கிழமை (09) மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது, நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.