சோமாலியக் கடற்கொள்ளையர்களின் பிடியில் கடந்த 44 மாதங்களாக இருக்கும் தமிழர் ஒருவரை விடுவிக்க மாநில அரசு உதவ முன்வர வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும், செயல்பாட்டாளர்களும் கோரியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் பகுதியைச் சேர்ந்த டெனிசன் உட்பட 15 பேர், 28.9.2010 முதல் கடற்கொள்ளகியர்களின் பிடியில் உள்ளனர் என்றும், அவர்களில் 8 பேர் மட்டுமே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் புன்னைக்காயல் கப்பல் மாலுமிகள் சங்கத்தின் உறுப்பினர் தெரிவித்தார்.
இவர்களை விடுவிக்க ஒன்பது கோடி இந்திய ரூபாய்கள் வரை அவர்கள் கோரியுள்ளதாக, டெனிசன் ஒரிரு தினங்களுக்கு முன்னர் தமது குடும்பத்தாருடன் தொலைபேசியில் உரையாடியபோது தெரிவித்தார் என்றும் அவர் கூறுகிறார்.
அவர் பணியாற்றிக் கொண்டிருந்த கப்பல் கடற்கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்டாலும், இந்திய அரசால் பிடித்து வைக்கப்பட்டுள்ள சோமாலியக் கடற்கொள்ளையர்கள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே, டெனிசன் உட்பட இதர ஏழு பேரும் விடுவிக்கப்படுவார்கள் என, இவர்களை பிடித்து வைத்துள்ளவர்கள் கூறுகிறார்கள் என்று தமக்கு சொல்லப்பட்டது என்கிறார் வெர்ஜில்.
மத்திய அரசு அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாலும், மாநில அரசும் அதற்கான அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்பதாலேயே நேற்று (புதன்கிழமை) தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசியதாகவும் வெர்ஜில் தெரிவித்தார்.
ஆறுமாதங்கள் முன்னர் வரை கப்பல் நிறுவனம் டெனிசனுக்கு ஊதியம் அளித்து வந்தது என்றும், அண்மையில் மத்திய அரசு அவரது குடும்பத்தாருக்கு 2.5 லட்ச ரூபாய் கருணைத் தொகை அளித்து உதவியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆனால் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, டெனிசனின் விடுதலையையே மிகவும் முக்கியமானது என அனைவரும் கருதுவதாகவும் அவர் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் பகுதியில் இருந்து மட்டும் சுமார் 800 பேர் கப்பல்களில் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.