யுத்த காலத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணை முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த விசாரணைக்கு சாட்சியமளிக்க 60 பேருக்கு மேல் இன்று விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவத்தினருக்கு எதிராகவும் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் காணாமற்போனவர்களின் உறவினர்கள் சாட்சியமளித்தனர்.
இதேவேளை, இறுதியுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன்,பொக்கனை போன்ற பகுதிகளில் வைத்தே அதிகளவானோர் காணாமற்போனதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சிங்களை பதிவு செய்யப்பட்டுளன.
இந்த விசாரணைக்கு தற்போது சாட்சியங்களை பதிவு செய்ய வருகைதந்தவர்களில் அதிகமானவர்கள் வயோதிபர்காளாகவேயுள்ளனர்.
இதன் காரணமாக அவர்கள் முன்னுக்குப் பின் முரணான வகையில் சாட்சியங்களை பதிவு செய்தும் வருகின்றனர்.அது மட்டுமின்றி ஆணைக்குழுவினரினால் எழுப்பப்படும் கேள்விகளும் சாட்சியங்களை பதிவுசெய்ய வருகின்றவர்களை தடுமாற வைப்பதை அவதானிக்க முடிகின்றது.
மேலும் நட்ட ஈடுகளையும் அரசாங்க உதவிகளையும் இராணுவத்தினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் கேள்வியெழுப்பும் ஆணைக்குழுவினர் காணாமற்போனவர்கள் தொடர்பாக உறுதியனபதிலளிப்பதில் பின் நிற்பதையும் அவதானிக்க முடிகின்றது.
இருப்பினும் காணாமற்போன தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறும் அரசாங்க உதவிகளை தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் காணாமற்போனவர்களின் உறவினர்கள் சாட்சியங்களைப்பதிவு செய்து வருகின்றனர்.
விடுதலைப்புலிகள் வீட்டுக்குள்ளும், பாடசாலைகளில் பிரசாரங்களை மேற்கொண்டும் தமது பிள்ளைகளை கொண்டு சென்றதாகவும் ஆனால் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே அவர்கள் காணாமற்போயுள்ளனர் என்றும் சாட்சியங்கள் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி