இலங்கையில் மத வன்முறை, துவேஷம் குறித்து ஐநா கவலை

இலங்கையில் கடும்போக்கு பௌத்த குழுக்களால் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிராக வன்முறை நிகழ்த்தப்படுவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் சிறப்பு பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.

பொது பல சேனா அமைப்பின் பிக்குகள்
பொது பல சேனா அமைப்பின் பிக்குகள்

குற்றம் இழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக 350 தாக்குதல்களும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 150 தாக்குதல்களும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்று கூறியுள்ளது.

கடந்த மாதம் 15ஆம் தேதி கடும்போக்கு சிங்கள தேசியவாதக் குழுவான பொது பல சேனா, அழுத்கமவில் மிகப் பெரிய ஊர்வலத்தை நடத்தியதன் காரணமாக, வகுப்புக் கலவரங்கள் நடந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். 80 பேருக்கும் மேல் காயமடைந்தனர்.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளும் வீடுகளும் சில இடங்களில் மசூதிகளும் சூறையடப்பட்டன என இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

குற்றம் செய்துவிட்டுத் தப்பிவிடலாம் என்ற இலங்கைச் சூழலே வன்முறையைத் தூண்டுகிறது என ஐக்கிய நாடுகள் சபையின் மதச் சுதந்திரத்திற்கான சிறப்புப் பிரதிநிதி ஹெய்னர் பிலெஃபெல்ட் குறிப்பிட்டுள்ளார்.

பொது பல சேனா தவிர சிங்கள ராவய, ஹெல பொது பொவுர ஆகிய குழுக்களும் இலங்கையில் கடும்போக்கு பார்வையைக் கொண்டிருக்கின்றன என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பிற சமூகத்தினர் மத மாற்றத்தில் ஈடுபடுவதாக பொது பல சேனா குற்றச்சாட்டு
சிறுபான்மை மதத்தவரால் புத்தர் சிலைகள் தகர்க்கப்படுவதாகவும் சுவிஷேச கிறிஸ்தவர்கள் இளைஞர்களையும் மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளையும் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்துவருவதாகவும் இந்தக் குழுக்கள் உள்ளூர் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்திவருவதாக கூறப்படுகிறது.

அதேபோல, சிங்கள மக்களை அழிப்பதற்காகவும் சந்ததிகள் வளர்வதைத் தடுப்பதற்காகவும் போதைப் பொருட்களையும் கருத்தடுப்பு மாத்திரைகளையும் முஸ்லிம்கள் கடத்திவருவதாகவும் இக்குழுக்கள் கூறிவருவதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மாதிரியான கருத்துக்கள், இலங்கையில் பெரும்பான்மையாக வசிக்கும் சிங்கள பௌத்தர்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவதோடு, சிறுபான்மையினர் மீது விரோத உணர்ச்சியையும் வளர்க்கின்றன என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts