புதன்கிழமை தோறும் காலை உணவுடன் ‘ராஜபக்‌ஷக்களின் கூட்டம்’ தவறாது நடக்கும்!

ஆளும் தரப்புக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பம் மற்றும் குத்துவெட்டுக்களை அடுத்து, அரசுத் தரப்புக்குள் சலசலப்பும் பலவீனமும் தென்படுவதை அடுத்து, ஒவ்வொரு புதன்கிழமையும் காலையில் காலை உணவுடன் தங்களுக்குள் மந்திராலோசனைக் கூட்டத்தை தவறாது கூட்டுவதற்கு ‘ராஜபக்‌ஷக்கள்’ தீர்மானித்திருக்கின்றனர் என அறியமுடிகின்றது.

rajapakasha family

ஆட்சித் தலைமைக்குள் முரண்பாடு இருப்பது போல வெளியே தென்படுவதைப் பயன்படுத்தியே அரசை ஆட்டம் காண வைக்கவும், ஆளும் தரப்பை பலவீனப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நன்கு புரிந்து கொண்டுள்ளாராம்.

எனவே தற்போதைய சவால் நிலையை முறியடிப்பதற்கு அரசை வழிநடத்தும் ‘ராஜபக்‌ஷக்கள்’ கட்டமைப்பு ஐக்கியமாகவும், பலமாகவும், ஒன்றுபட்டுமே இருக்கின்றது என்பதை வெளிக்காட்ட வேண்டிய ஒரு தேவை எழுந்திருப்பதாகவும் ஜனாதிபதி ராஜபக்‌ஷ உணருகின்றார்.

அதனை ஒட்டியே புதன்கிழமை காலை உணவுடனான ஒன்றுகூடலை வாராந்தம் தவறாது கூட்டுவதற்கு அவர் பணித்திருக்கின்றார். ஜனாதிபதியுடன் அவரது ஆலோசகரும், அமைச்சருமான பஸில் ராஜபக்‌ஷ, மற்றொரு சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, மூத்த சகோதரரான சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ, மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் இந்தப் புதன்கிழமை கூட்டத்தில் பங்குபற்றுவர் என்று தெரிகின்றது.

* உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் அரசுத் தலைமை எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நெருக்கடிகள், சவால்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆராய்ந்து பூர்வாங்க முடிவுகளை ஐக்கியமாக எடுத்தல், ஆட்சிப் பீடத்தில் ராஜபக்‌ஷக்களின் பிடி இறுக்கமாகவும், ஐக்கியமாகவும், ஸ்திரமாகவும் இருப்பதை ஆட்சிக் கட்டமைப்பின் சகல மட்டங்களுக்கும் கோடி காட்டுதல், ராஜபக்‌ஷக்கள் இடையே பிளவை ஏற்படுத்துவதன் மூலம் அரசை பலவீனப்படுத்தலாம் என்று எண்ணும் தரப்புக்களின் நப்பாசையை முறியடித்தல், இதுபோன்ற காரணங்களை மனதில் கொண்டே இத்தகைய ஒன்றுகூடலுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருக்கிறார் என்று கூறப்பட்டது.

ஒவ்வொரு புதன்கிழமையும் பாதுகாப்புச் சபை கூடுவது வழமை. புதன்கிழமை காலையில் மேற்படி காலை உணவுடனான ராஜபக்‌ஷக்களின் கூட்டத்தை முடித்துக் கொண்ட பின்னரே, பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும், அவரது சகோதரான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவும் செல்வர் என்றும் கூறப்பட்டது.

இந்த வரிசையில் முதலாவது ‘புதன்கிழமை காலைக் கூட்டம் இன்று (2 ஆம் திகதி) காலையில் நடைபெறும் எனத் தெரிகின்றது.

Related Posts