காமெடி, ஆக்ஷன், காதல் போல ஈழத் தமிழர்களை மையப்படுத்திய திரைப்படங்களை எடுப்பதும் தமிழ் சினிமாவின் டிரெண்டாகிவிட்டது. வெளிவரவிருக்கும் ஈழம் தொடர்பான சில தமிழ்த் திரைப்படங்கள் இவை.
ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியரான ஆனந்த் என்பவரது இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் ‘யாழ்’. ”ஈழத்தமிழர்கள் பற்றி தமிழ்ல வந்திருக்கிற பெரும்பாலான படங்களில் அவர்களுடைய பிரச்னை, அரசியல், அவலங்கள்னு கருப்புப் பக்கங்களை மட்டுமே பதிவுசெஞ்சிருக்கே தவிர, இலங்கையில் வாழும் தமிழ் மக்களைப் பற்றிய படமாக எதுவுமே வந்தது இல்லை. அவங்களுக்குள்ளும் காதல், மோதல், நட்பு, பாசம், பிரிவுனு எல்லா உணர்வுகளும் இருக்கு. அதை மட்டுமே பதிவுபண்ற முதல் படமா என்னுடைய ‘யாழ்’ இருக்கும். இலங்கையிலேயே ஆரம்பிச்சு, இலங்கையிலேயே முடிகிற கதை. இது இலங்கைக்குச் சென்று அங்கிருக்கும் தமிழ் மக்களுடன் வாழ்ந்த உணர்வைக் கொடுக்குமே தவிர, அங்கிருக்கும் அரசியல், பிரச்னை இருக்காது. ஏன்னா, அங்கே இருக்கக்கூடிய மக்களும் ‘எங்க துயரத்தையே திரும்பத் திரும்பக் காட்டிக்கிட்டே இருந்தீங்கனா, அதுதான் எங்க பெருந்துயரம்’னு நினைக்கிறாங்க” என்கிறார் இயக்குநர் ஆனந்த். படத்தின் வசனங்கள் மட்டுமல்ல, பாடல்களும் ஈழத் தமிழிலேயே உருவாக்கப்பட்டுள்ளன.
மற்றொரு தனிநபர் வரலாறாக விடுதலைப் புலிகளின் ஊடகப்பிரிவில் பணியாற்றியவரும் ‘சேனல்4’ வீடியோவால் பரவலாக அறியப்பட்டவருமான இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறு ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில் படமாகி, இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கிறது. இளையராஜாவின் இசையில் முளைத்துள்ள ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ன மாதிரியான விஷயங்களை முன்வைக்கப்போகிறது என்பதை படத்தின் இயக்குநர் கணேசனே விளக்குகிறார். ”8 வயதிலிருந்து 27 வயது வரை இசைப்பிரியாவின் வாழ்வில் நடந்த சம்பவங்களைக் காட்டியிருக்கோம். குழந்தையாக ஸ்கூலுக்குப் போனதில் ஆரம்பித்து, கல்லூரிக்குப் போனது, குடும்பத்தோட இருந்த சந்தோஷத் தருணங்கள், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு வந்தது, ஸ்ரீராம் என்பவரைக் காதலித்து திருமணம் செஞ்சுக்கிட்டதுனு முதல் பாதி வரை முழுக்க முழுக்க இசைப்பிரியாவைச் சுற்றும் கதை, பின்பாதியில் போரின் உச்சக்கட்டத்தையும் இசைப்பிரியா பிடிபட்டபோது நடந்த விஷயத்தையும் பதிவு பண்ணியிருக்கோம். இசைப்பிரியா ஆயுதம் ஏந்திப் போராடிய போராளி கிடையாது…. அவர் ஒரு கலைஞர். ஆனா, அவங்களுக்கும் அதே மரணம்தானே மிஞ்சியது? இப்படி பல விஷயங்களைப் படத்தில் பதிவுபண்ணியிருக்கேன். மற்றபடி, போரின் வீரியத்தைக் காட்டியோ, போரின் கொடூரங்களைப் படமாக்கியோ, சர்ச்சையை ஏற்படுத்த விரும்பலை. அதேசமயம், மனிதநேயம் உள்ள ஒவ்வொருவரையும் இந்தப் படம் உலுக்கும்” என்கிறார் கணேசன்.
பிரபாகரனின் முழுமையான வாழ்க்கை வரலாற்றினைப் பதிவுசெய்யும் விதமாக பழ.நெடுமாறன் எழுதிய ‘பிரபாகரன் : தமிழர் எழுச்சியின் வடிவம்’ என்கிற 1,400 பக்க புத்தகத்தினை மையமாகக்கொண்ட திரைப்படத்தினை இயக்குகிறார் வ.கௌதமன். ”இந்தப் படத்தில், முள்ளிவாய்க்கால் போரில் நடந்த அனைத்து விஷயங்களோடு, பிரபாகரனின் இறுதி நொடி வரை நடந்த அனைத்து உண்மைச் சம்பவங்களையும் பதிவுசெய்வேன். தற்போது, படத்தின் திரைக்கதை வடிவம் முழுமை அடைந்து, படப்பிடிப்புக்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன” என்கிறார் கௌதமன்.
போரில் கொல்லப்பட்ட பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனைப் பற்றிய படமாக உருவாகிறது ‘புலிப்பார்வை’. வேந்தர் மூவிஸ் தயாரிப்பில், ‘ரட்சகன்’, ‘ஜோடி’ படங்களை இயக்கிய பிரவீன் காந்த் இந்தப் படத்தை இயக்குகிறார். அறிவிப்போடு இருக்கும் இந்த படத்திற்காக ‘புலிப்பார்வை.காம்’ என்ற இணையதளம் துவங்கப்பட்டு, அதில் திரைப்படம் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது பதிவாகிக்கொண்டிருக்கின்றன.
”இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு மட்டுமா… இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு வந்து அகதிகளா இருக்கும் தமிழர்களுக்கும் ஆயிரம் பிரச்னைகள் இருக்கு” என ‘சிவப்பு’ படத்தில் கொஞ்சம் மாற்றி யோசித்திருக்கிறார் சத்யசிவா. ‘கழுகு’ படத்திற்குப் பிறகு இவர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
” ‘நம்பி வந்தவங்களை வாழவைக்கணும். அவங்களை வெச்சு அரசியல் பண்ணக் கூடாது’ டிரெய்லரில் ராஜ்கிரண் பேசுற இந்த வசனம்தான் படத்தோட லைன். இங்கே அகதிகளா வர்றவங்க ஏன் தப்பிச்சு ஆஸ்திரேலியா போகிறார்கள் என்பதைப் பதிவு பண்ணியிருக்கேன். நடித்து முடித்த கையோடு, முழுப் படத்தையும் பார்த்த ராஜ்கிரணே படத்தின் பாதிப்பிலிருந்து மீள முடியாமல், ‘நானே இந்த படத்தை ரிலீஸ் பண்றேன்’ என்று தெரிவித்திருக்கிறார்” என்கிறார் சத்யசிவா.
தவிர, ‘வனயுத்தம்’ படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்குத் தொடர்பான படமும் ‘பிரபாகரனின் வாழ்க்கையில் ஒரு பகுதி’யாக உருவாகிறது. நிரோஜன் என்ற அறிமுக இயக்குநரின் ‘கூட்டாளி’ படமும் ஈழத் தமிழர் கதைக்களம்தான்.
எல்லாம் கண்ணீரைக் காசாக்கும் முயற்சியாக இல்லாமல் இருந்தால் சரிதான்!
நன்றி – கே..ஜி.மணிகண்டன்