அன்பே கடவுள் என்று எல்லா மதங்களும் எமக்கு கற்றுதரும் இந்தவேளையில் ஊண்இயல்புகளுக்கு அடிமையாகாது மனித நேயத்தை மதித்து வாழ வேண்டும். மக்களை வாழவைக்க வேண்டும் என்று உதித்த சமயங்கள் இன்று மக்களை துன்புறுத்தி இன்பம் காண்பதாலும் இதன்மூலம் தாங்கள் வளர்ச்சி காணதுடிப்பதாலும் ஒவ்வொருவரும் அமைதி இழந்து காணப்படுகின்றனர் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை தெரிவித்தார்.
நேற்று முன்தினம் புதன் கிழமை மன்னார் பொதுவிளையாட்டு மைதான முன்றலில் தென் பகுதியிலுள்ள அளுத்கம பேருவளைஇ தர்கா நகர் போன்ற இடங்களில் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் வன்செயலைக் கண்டித்து இவர்களுக்கான சர்வமத பிரார்த்தனை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கிறிஸ்தவம், முஸ்லிம், இந்து, பௌத்தம் மற்றும் திருச்சபையை சாராத கிறிஸ்தவ மதத்தலைவர்களின் சர்வ மத பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.
இதைத்தொடர்ந்து மன்னார் ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை தொடர்ந்து உரையாற்றுகையில்,
தற்பொழுது நாட்டில் நிலவும் இந்த விரோத செயல்கள் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இங்கு இருக்கின்ற எல்லா இனங்களும் ஒரு மனப்பட்டு நல்ல சிந்தனையுடன் வாழ வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையுடன் வாழ்க்கை முறையை கண்டுகொள்ள வேண்டும்.
பேருவளைப் பகுதியில் கொல்லப்பட்டவர்கள் உற்றார் உறவினர்களுக்காக அனுதாபப்படுகின்ற இந்த நேரத்தில் இப்படிப்பட்ட காரியங்கள் எம் மத்தியில் சமய வாதிகளை கொல்வதற்கு எடுத்திருக்கும் முயற்சிகளுடன் இதற்குமேல் இனி என்ன இருக்கின்றது என்பது எமக்குத் தெரியாது.
ஆகவே மக்களை வாழவைக்க வேண்டும் என்று உதித்த சமயங்கள் இன்று மக்களை துன்புறுத்துவதிலும் இன்பம் காண்பதிலும் இதன்மூலம் தாங்கள் வளர்ச்சி கொள்ளலாம் என்று கோட்டைகள் கட்டுவதை இக்காலத்தில் நாம் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
ஆகவே சமயம் என்றால் என்ன எல்லா சமயங்களுக்கும் பொதுவாக இருப்பது என்னஎன்ற உண்மையை தெரிந்து கொண்டு வெவ்வேறு சமயங்களினூடாக இறைவன் மக்களை தம்மிடம் வரும்படி அழைத்துள்ளார்.
ஆகவே நாம் ஒவ்வொரு சமயத்தையும் மதிப்பதனூடாக மனிதரின் அடிப்படை உரிமை, சமூக உரிமை அத்துடன் சமய உரிமையின் ஊடாக ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று அவர்கள் தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கவேண்டும் என்பதை விடுத்து மனிதர்களுக்கு உபத்திரம் ஊண் இயல்பு காரியங்களுக்கு அடிமைப்பட்டு இப்படிப்பட்ட காரியங்களை செய்வது வெட்கத்துக்குரிய விடயமாகும்.
ஆகவே கடவுளால் ஆட்கொள்ளப்படுபவர்கள் கடவுளின் ஆவிக்கு தங்களை அர்ப்பணிப்பவர்கள் வாழ்விலே உண்மையான அன்பு இருக்க வேண்டும் அப்பொழுது அங்கு அமைதி இருக்கும் சமாதானம் இருக்கும்.
அத்துடன் எல்லா விதமான வளங்களும் இருக்கும் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கும் ஆர்வம் காணப்படும். ஆகவே இந்த வேளையிலே எல்லா சமயங்களுக்கும் அடிப்படையாக இருப்பது அன்பே கடவுள் அன்பு கொண்டுள்ளவன் கடவுளுடன் இணைந்திருக்கின்றான் கடவுளும் அவனுடன் இணைந்திருக்கிறார் என்பதுதான் ஒவ்வொரு சமயத்தினதும் சாராம்சமாகும்.
கிறிஸ்தவத்திலே பழைய புதிய ஏற்பாடுகள் என ஒரு பெரிய 72 புத்தகங்கள் இருக்கின்றன அவை கூறுவது என்ன அன்பே கடவுள் என்றுதான் சொல்லுகின்றது. அதாவது கடவுள் நம்மோடு இருக்கின்றார் நாமும் கடவுளுடன் இருக்கின்றோம்.
நாம் கடவுளை கண்டதில்லை ஆனால் ஒருவர் மற்றவர் மீது அன்பு கொண்டிருந்தால் கடவுள் நம் மத்தியில் இருக்கின்றார். இதுதான் எமக்கு வழங்கப்பட்டிருக்கும் படிப்பினைகள். இந்த அடிப்படையில்தான் மற்றைவைகள் சொல்லப்படுகிறது. இதனால்தான் ஒவ்வொரு சமயமும் இவற்றை ஆணிவேராக கொண்டுள்ளது. இவ்வாறான அன்பு எல்லா மதங்களிலும் மலர வேண்டும். அதைவிடுத்து கலவரங்கள் நிகழ்கின்றபோது இறைவனை நோக்கி செபிக்காது மனித மாண்பை மதிக்காது இருக்காது இறைவனை நோக்கி குரல் கொடுக்கவே இந்நாள் எமக்கு அறைகூவல் விடுக்கின்றது. எல்லா மக்களும் வாழ வேண்டும் எல்லா மக்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அன்பு இல்லையேல் அங்கு அமைதி இருக்காது சண்டையும் சச்சரவும்தான் உருவெடுத்திருக்கும். அன்பு செய்யும் சக்தியை இறைவன் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கின்றார்.
இறைவன் தனது சாயலாக மனிதனை படைத்திருக்கின்றார் என்றால் அவரின் விலைமதிப்பில்லாத அன்பின் நிமித்தமே இவற்றை செய்துள்ளார் என்று நாம் சிந்திக்க வேண்டும். கடவுள் மனிதனுக்காக எல்லாவற்றையும் படைத்த பின் நல்லது எனக் கண்டு மனிதன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் மனிதரின் பாவம் கீழ்படியாமை தானே சட்டத்தை உருவாக்கி தான் தோன்றித்தனமாக வாழ்வதாலேயே இன்று தீமை பெருகிக் கொண்டு வருகிறது.
ஆகவே கடவுள் தீமைக்கு ஊற்றல்ல நன்மைக்கே ஊற்று ஆகவே இறைவனை நாம் ஒவ்வொருவரும் எம் இதயத்தில் இருத்திக் கொள்ளவேண்டும். சமயத்துக்கு எதிரான செயல்பாட்டில் இறங்கும்போது அது அவர்களின் சமயத்தை இல்லாதொழிக்கும் செயல்பாடாகவே அமையும். ஆகவே எல்லா சமயத்தவரும் ஒவ்வொரு சமயத்தவரையும் மதித்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.
உடலுக்கு உணவு எப்படி அவசியமோ இதேபோன்று அன்பு எமது வாழ்வுக்கு ஓர் உணவாக அமைய வேண்டும். எமது வாழ்க்கை மிருக வாழ்க்கையாக இருக்கக் கூடாது மற்றவர்களுக்காக நாம் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.