வடமாகாண சபையில் தனது பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபையின் நடுவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
வடமாகாண சபையின் 11 ஆவது அமர்வு நேற்று காலை கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது. அந்த அமர்வின் போதே சிவாஜிலிங்கம் சபை நடுவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
நேற்றய அமர்வுக்கு கறுப்பு மேலாடையுடன் வந்த சிவாஜிலிங்கம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தன்னால் முன்வைக்கப்பட்ட 3 பிரேரணைகள் இது வரை சபை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதனை அடுத்து சக மாகாண சபை உறுப்பினரான சித்தார்த்தன் சிவாஜிலிங்கத்தை சமாதானப்படுத்தி இருக்கையில் அமர செய்தார்.
சிவாஜிலிங்கத்தின் குறித்த 3 பிரேரணைகளும் கட்சியுடன் தொடர்புடையதாக இருப்பதனாலையே அது விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படவில்லை எனவும் கட்சியின் முடிவு தெரிவிக்கப்பட்டதும் அடுத்த அமர்வில் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
நேற்றய 11 ஆவது அமர்வின் போது உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட 7 பிரேரணைகளில் 6 பிரேரணைகள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டதுடன் 1 பிரேரணை அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதேவேளை மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு நேற்று முன்தினம் முதல் வாபஸ் பெறப்பட்ட பின்னர் பல்வேறு அச்சுறுத்தல்கள் விடப்பட்டுள்ளது தனது பாதுகாப்பு தொடர்பில் மாகணசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தை அனந்தி முன்வைத்தார்.
அதனை விசேட பிரேரணையாக சபையில் ஏற்றுகொள்ளப்பட்டது இதனை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வழிமொழிந்தார்.
அதனை அடுத்து மாகாண சபையின் 12 ஆவது அமர்வு எதிர்வரும் யூலை மாதம் 12ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.