கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆகியவற்றுக்காக நீரைப்பெறும் மார்க்கமாக அமைந்துள்ள இரணைமடுக் குளம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இவ்விடயத்தில் அனைவரும் பொறுப்புணர்வுடனும் அக்கறையுடனும் செயற்படவேண்டும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேச சந்திரகுமார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று கிளிநொச்சியில் நடைபெற்ற இரணைமடு – யாழ் குடிநீர் விநியோகத்திட்டம் தொடர்பில் விவசாயிகளுடன் மேற்கொள்ளப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் விசேட கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்.
நீருக்காக மிக நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்ற நிலையிலேயே நாம் இரணைமடு நீர் விநியோகத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம். இந்நிலையில் குடிநீரே மக்களின் உயிர் வாழ்வைத் தீர்மாணிக்கின்றது என்ற வகையில் அது தொடர்பில் அதிக கரிசனை செலுத்த வேண்டியவர்களாகவே அனைவரும் உள்ளனர.
இன்று கிளிநொச்சி மாவட்ட மக்களே குடிநீரின்றி தவித்துக்கொண்டிருக்கின்றனர், எனவே குடிநீர் தேவைக்கு அடுத்த படியாகவே விவசாயம் தொடர்பில் சிந்திக்கவேண்டிய அளவுக்கு அதி உச்ச வரட்சி நிலையினை எமது மாவட்டம் எட்டியுள்ளது. அதனடிப்படையில் இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கைக்கூட இவ்வருடம் 750 ஏக்கராக மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது.
ஆகவே நாம் அனைவரும் இரணைமடுத் திட்டம் தொடர்பில் ஆலோசனை நடாத்துகின்ற சந்தர்ப்பங்களில் கிளிநொச்சி மாவட்ட மக்களின் நீர்த் தேவைகள் முந்நிலைப் படுத்தப்படவேண்டும் என்பதிலும் இம்மாவட்ட மக்களின் தேவைகள் முதலில் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதிலும் அதிக அக்கறைகொண்டுள்ளோம். ஏனெனில் இன்று யாழ்மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கு அரசாங்கம் மாற்றுவழிகளை இனம் கண்டுள்ளதோடு அதனை செயற்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணக்கப்பாடும் கண்டுள்ளது.
ஆனால் இன்று யாழ் தீவகப்பகுதியைவிடவும் கிளிநொச்சிமாவட்டத்தின் பூநகரிபிரதேச மக்கள் அதிகளவான குடிநீர்பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர் அப்பகுதிக்கு பிரதேச செயலகத்தினால் சுமார் 26 கிலோ மீற்றர்களுக்கு அப்பாலிருந்து பௌசர்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது. இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் குடிநீர் விநியோகத்திற்காக அனர்த்த முகாமைத்துவப்பிரிவினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஐந்துமில்லியன் ரூபா நிதியும் முடிவடையும் தருவாயை எட்டியுள்ளது எனக் குறிப்பிட்ட அவர்
கிளிநொச்சி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைகூட இரணைமடுக் குளத்திலேயே தங்கியுள்ளது. அதாவது கிளிநொச்சி நகரை அண்டிய 40 ஆயிரம் வரையான குடும்பங்களுக்கான குடிநீர் விநியோகத் திட்டம் 1800 மில்லியன் ரூபா செலவில் அக் குளத்தை மையமாகக் கொண்டே செயற்படுத்தப்பட்டு வருகின்றது விவசாயிகளைப் போன்று குடிநீருக்காகவும் இம்மாவட்ட மக்கள் இரணைமடுக் குளத்தை நம்பியிருக்கின்றனர்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயத்தை மேம்படுத்தவதற்காக பல பாரிய திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படவேண்டியுள்ளது. புதுமுறிப்புக்குளத்தின் கீழான நீர் வநியோக கால்வாய்கள் புனரமைக்கப்பட வேண்டும். அத்தோடு அக்கராயன் குளத்தின் கீழ் பல ஏக்கர் நெற்காணிகள் கால்வாய்கள் சீரின்றி பயிரிடப்படாதிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் அப்பால் மானாவாரிப் பயிர்செய்கையை மட்டுமே நம்பிவாழ்ந்துகொண்டிருக்கும் பூநகரி பிரதேச மக்களுக்கும் மாற்றுவழிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இவற்றுக்கெல்லாம் நிதிவளங்களை பெறுவதற்காக அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில் அம்மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள். ஆகவே அரசாங்கம் கடனாகப் பெற்று இப்பகுதிகளில் நடைமுறைப்படுத்த முன்னரும் செயற்திட்டங்களை சீராக முன்னெடுப்பதற்கான அனைத்து சாதகமான சூழல் இங்கு நிலவவேண்டும்.
ஏனெனில் வடக்குமாகாணமே எதிர்கால மேம்பாட்டுக்காக பாரிய நிதிவளங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றது எனவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்.
இரணைமடுக்குளம் புனரமைக்கப்பட வேண்டும் என்பது அனைவரினதும் வேண்டுகோலாக உள்ளது. கடந்த காலங்களில் அக்குளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை அனைவரும் அவதானித்துள்ளனர். எனவே குளம் புனரமைப்பது தடைப்படுமானால் மாவட்ட மக்கள் அனைவரினதும் நிலை கவலைக்கிடமாகும். ஆகவே இன்று ஏற்பட்டுள்ள சூழலை பயன்படுத்தி குளத்தின் புனரமைப்பு தொடர்பில் அனைவும் அதிக அக்கறை காட்ட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.