வடக்கும் கிழக்கும் தொடர்ச்சியாக தமிழ் பேசும் மக்களின் நிலங்களாக இருக்கவில்லை என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காகவே தென்பகுதியிலிருந்து 450 சிங்களக் குடும்பங்களைக் கொண்டு வந்து முல்லைத்தீவில் குடியேற்றியுள்ளார்கள்.
அத்துடன் அவர்கள் சட்டவிரோதமான மீன்பிடி நட வடிக்கையில் ஈடுபடுவதற்கும் இராணுவத்தினர் முழுமை யான ஒத்துழைப்புக்களை வழங்குகின்றனர் இவ்வாறு இலங்கைக்கான சுவிஸ் தூதருக்கு விளக்கமளித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.
யாழ்.மாவட்டத்துக்கு நேற்றைய தினம் வருகை தந்த சுவிஸ் தூதுவர் தோமஸ்ரன் லிப்ரன், வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்புத் தொடர்பில் வடக்கு முதலமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடகக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் தூதுவர், தாம் வடக்கில் ஏதாவது இடங்கள் முக்கியமாக சென்று பார்க்க வேண்டியிருக்கின்றதா? என்று என்னிடம் கேள்வியயழுப்பினார். இதன் போது முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களை நேரடியாகச் சென்று பார்வையிடுமாறு தெரிவித்தேன்.
எவ்வாறு வட கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் பிரதேசமாக இதுவரை காலமும் இருந்து வந்ததென்பதையும் நடுவிலே சிங்களக் குடியேற்றங்களை முன்னிறுத்தி வடக்கும் கிழக்கும் தொடர்ச்சியாக தமிழ் பேசும் மக்களின் இடங்களாக இருக்கவில்லை என்ற கருத்தை முன்வைப்பதற்காக 450 குடும்பங்களை தெற்கிலிருந்து கொண்டுவந்து குடியேற்றி உள்ளார்கள் என்பதையும், அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவர்கள் அந்தத் தொழிலை பாரம்பரியமாக செய்தவிதத்திலே செய்ய முடியாமல் தடைசெய்து தெற்கிலிருந்து வந்தவர்கள் தடைசெய்யப்பட்ட முறைகளிலே மீன்பிடித் தொழிலைச் செய்வதற்கு இராணுவத்தினரால் எவ்வாறு அனுசரணைகள் வழங்கப்படுகின்றன என்பது பற்றி எடுத்துக்காட்டி இது ஒரு முக்கியமான விடயம் என்றும் தெரிவித்தேன்.
அத்துடன் அங்குள்ள தமிழ் மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உதவி செய்வது அவசியம் என்பதையும் குறிப்பிட்டேன். இதேவேளை சுவிஸ் தூதுவர் தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபை உறுப் பினர்களான சிவமோகன், சர்வேஸ்வரன், பசுபதிப்பிள்ளை, சுகிர்தன் ஆகியோரை வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாண சபைக்கான அதிகாரப் பரவலாக்கம் மற்றும் மாகாண சபையைக் கொண்டு நடத்துவதிலுள்ள தடங்கல்கள் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களால் தூதுவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் அரசியல் தீர்வு தொடர்பிலும் ஆராயப்பட்டது. தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறை யிலான ஆட்சியே தீர்வாகும். அதனை தமிழ் மக்கள் பெற் றுக் கொள்வதற்கு சுவிஸ் அரசும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் சுவிஸில் உள்ளதைப் போன்றாவது அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த விடயங்களைக் கேட்டறிந்த பின்னர் பதிலளித்த சுவிஸ் தூதுவர், சகல விடயங்களையும் கருத்தில் எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.