யுத்தத்திற்கு பின்பு தலைமறைவாகி இருந்த தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை சார்ந்த இருவரை குற்றப்புலனாய்வு பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
நாட்டில் 30 வருடமாக யுத்தமொன்றை மேற்கொண்ட பயங்கரவாத இயக்கம் முற்றாக அழிதொழிக்கப்பட்ட போதிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சார்ந்தவர்கள் யுத்தத்திற்கு பிற்பாடு தலைமறைவாக சிங்கள பிரதேசங்களிலிருந்து புலம் பெயர் தமிழர்களுக்கு தகவல் அனுப்பி வருகின்றனர்.
இதற்கமைய கடந்த 17 ஆம் திகதி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தரப்பினருள் ஒருவரான சுப்பிரமணியம் ரவிந்திரன் என்பவர் ஹொரனையில வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த நபர் யுத்தம் முடிவடைந்த பிற்பாடு ஹொரனை ரைகம் பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார். இவரை அப்பிரதேசத்தில் பதிவு செய்வதற்கு அப்பிரதேசத்தைத் சேர்ந்த கிராம சேவகர் இலஞ்சம் பெற்றுள்ளார்.
இதன்படி அப்பிரதேச கிராம சேவகரை கைது செய்ய முற்பட்ட வேளை அவர் தப்பிச் சென்றுள்ளார். குறித்த கிராம சேவகர் தற்போது ஓய்வு பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
விடுதலை புலிகள் இயக்த்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும் தெரிய வருகிறது.
அதேபோன்று கடந்த 19 ஆம் திகதி தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் கடற்படகு இயந்திர பொறுப்பாளராக கடமையாற்றிய திருநாவுக்கரசு பிரதீபன் என்பவரே இரண்டாவதாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநாவுக்கரசு பிரதீபன் என்பவரும் கிளிநொச்சியை சேர்ந்தவராக கருதப்படுகிறது. குறித்த நபர் பிரான்ஸிற்கு செல்ல முற்பட்ட வேளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.