வரலாற்றுப் புகழ்மிக்க யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் வலி.வடக்கு (தெல்லிப்பளை) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
மாவிட்டபுரக் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா எதிர்வரும் ஜுலை 2 ஆம் திகதி ஆரம்பமாகி 26 ஆம் திகதி வரையிலும் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், திருவிழாவின் போதான சுகாதார, பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தல் தொடர்பில் தெல்லிப்பளை பிரதேச செயலர் எஸ்.ஸ்ரீமோகனன் தலைமையில் (24) கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, ஆலய சுற்றாடலில் தற்காலிகமாக பொலிஸ் பரிசோதனை நிலையம், சுகாதார வைத்தியதிகாரி பணிமனை மற்றும் பிரதேச செயலகப் பிரிவு என்பனவற்றை வழமைப்போன்று அமைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், ஆலய சுற்றாடலில் சுகாதாரம் பேணுதல், வாகன தரிப்பிடம் போன்ற விடயங்கள் வலி.வடக்குப் பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது.
ஆலய சுற்றாடலில் அமைக்கப்படும் கடைகளில் புகைத்தல் பொருட்களை விற்பனையை தடை செய்யவும் இதனை மீறி புகைத்தல் பொருட்கள் விற்பனை செய்யப்படுமாக இருந்தால் கடைகளின் அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், குறித்த கடைகளில், உணவகங்களில் பணியாற்றுபவர்கள் அனைவரும் சுகாதார வைத்தியதிகாரியினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதி பெற்று பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆலயத்தின் அன்னதான மடத்தில் சமையற்காரர்களாக பணிபுரிவோர், சுகாதார வைத்தியதிகாரியின் அனுமதியின் பின்னரே சமையலுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில், வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன், தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் செஞ்சோற் செல்வர் ஆறு திருமுருகன், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் பிரதம குரு பேரரசு இரத்தினசபாபதிக் குருக்கள், கீரிமலை நகுலேஸ்வர ஆலய பிரதம குருவும் ஆதீனகார்த்தாவுமான நகுலேஸ்வரா குருக்கள், தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி எஸ்.நந்தகுமார், காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.