வடக்கிலிருந்து விடுதலைப் புலிகள் விரட்டியடித்த போது காத்தான்குடி பள்ளிவாசலில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது கடையடைப்பு ஹர்த்தால் செய்வதற்கு எவரும் இருக்கவில்லை. இன்று ஹர்த்தால் செய்தவர்கள் அன்று எங்கிருந்தார்கள் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
இன்று சிறு சிறு சம்பவங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு ஹர்த்தால் செய்கின்றனர். இனவாதத்தை தூண்டுகின்றனர். இதனை இரு தரப்பினரும் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பாந்தோட்டை மாகாம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் 76 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட எரிபொருள் தாங்கிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இங்கு தொடர்ந்து உரையாற்றும் போது,
அன்று வடக்கிலிருந்து 19000 முஸ்லிம் மக்களை உடுத்த உடுப்போடு இரண்டு மணித்தியாலங்களுக்குள் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு வீடுகளிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் விடுதலைப்புலிகளே விரட்டியடித்தனர்.
அப்போதே ஹர்த்தால் கடையடைப்பு எங்கே? இன்று ஹர்த்தால் மேற்கொள்வோர் அன்று எங்கிருந்தார்கள்?எவரும் எதையும் செய்யவில்லை.காத்தான்குடி பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தி விடுதலை புலிகள் முஸ்லிம்களை கொலை செய்தனர்.யார் ஹர்த்தால் செய்தார்கள்?ஆனால், இன்று சிறு சம்பவத்திற்காக ஹர்த்தால் செய்கின்றனர்.இனவாதத்தை தூண்டுகின்றனர். இதனை இரண்டு தரப்பினரும் கைவிட வேண்டும்.
நாட்டின் சமாதானத்தை அமைதியை பாதுகாக்க அரசாங்கம் மட்டுமல்ல மக்களும் பங்களிப்பு வழங்க வேண்டும்.அன்று சிங்கள முஸ்லிம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டார்கள்.
அப்போதெல்லாம் ஹர்த்தால் எங்கிருந்தன ?நாட்டில் ஆங்காங்கே சிறு சிறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனைகள் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று அளுத்கமவிற்கு ஏன் இராணுவத்தினரை அனுப்பவில்லை என கேள்வி எழுப்புகின்றனர்.ரத்துபஸ் வலைக்கு இராணுவத்தை அனுப்பி வைத்தோம். இன்று அது தொடர்பில் ஐ.நா. எம்மிடம் கேள்வியெழுப்புகின்றது.
இந்நாட்டில் இனவாதத்திற்கு தூபமிடுவதை இரண்டு தரப்பினரும் கைவிட வேண்டும்.சம்பவம் இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் வதந்திகள் பரப்பப்படுவதை இன்று நிறுத்த வேண்டியுள்ளது.
எமது நாட்டின் அபிவிருத்திக்கு சீனா மட்டுமல்ல இந்தியா, கொரியா, ஜப்பான், பிரிட்டன் போன்ற பல நாடுகள் உதவிகளை வழங்குகின்றது.ஆனால், சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இவ் அபிவிருத்திகளை தடுக்கும் கைங்கரியங்களில் ஈடுபடுகிறது.இதனால் நாடும் மக்களுமே பாதிப்படைவார்கள்.
நாட்டில் எதிர்க்கட்சியொன்று இருக்க வேண்டும். ஆனால் அபிவிருத்திகளை எல்லாம் தடுத்து நிறுத்தும் முட்டுக்கட்டை போடும் எதிர்க்கட்சியாக இருக்கக் கூடாது. அபிவிருத்திக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கும் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும்.
ஆனால், அவ்வாறானதொரு கொள்கை எமது நாட்டு எதிர்க்கட்சியிடம் கிடையாது.நாட்டின் அபிவிருத்திகளை மக்களே அனுபவிப்பார்கள் எதிர்கால சந்ததியினரே பயன்படுத்துவார்களென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில் அமைச்சர்களான அநுர பிரியதர்ஸன யாபா, ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் உரையாற்றினர்.