மக்களுடைய வரிப்பணத்தில் சொகுசு வாகனம் ஓடும் யாழ். மாநகர சபை முதல்வர் அரசாங்க நிதியில் வாகனம் பெற்றுக்கொள்ளவுள்ள வடக்கு மாகாண முதல்வர், அமைச்சர்கள் தொடர்பில் விமர்சனங்களை வெளியிட முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையினர் சுகபோக வாழ்க்கையினை நடாத்தும் நோக்குடன் அரசிடம் இருந்து வாகனங்களை கொள்வனவு செய்யவுள்ளனர் என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அண்மைக்காலமாக தெரிவித்து வருகின்றார்.
எனவே இவை குறித்து விளக்கமளிக்கும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பு கைதடியில் உள்ள வடமாகாண சபைக் கட்டடத்தில் நேற்று நடைபெற்றது.அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கத்துக்குட்டி அரசியல் செய்யும் யாழ்.மாநகர சபை முதல்வர் வடக்கு மாகாண சபை தொடர்பில் விமர்சிக்க முடியாது. நாம் மாகாண சபையை பொறுப்பேற்க முன்னர் வரவு செலவுத்திட்ட வரைபு நிறைவு பெற்றுவிட்டது.
அதில் தலா 70 இலட்சம் ரூபா ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் மற்றும் அவைத்தலைவருக்கும் அரசினால் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலமைச்சர் , அமைச்சர்கள் 4பேர், அவைத்தலைவர் உட்பட 6பேருக்கும் 6வாகனங்கள் மிகவிரைவில் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் பிரதம செயலாளர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
எனினும் நாம் அரசினால் ஒதுக்கப்படும் வரவு செலவு திட்டத்திலேயே எமக்கு வாகனம் வாங்குவதற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. 70 இலட்சம் வழங்கப்பட்ட நிலையிலும் நாங்கள் 4சிலிண்டர் வாகனங்களே 58 இலட்சத்திற்கு கொள்வனவு செய்யவுள்ளோம். மிகுதி பணம் மக்களுக்களின் தேவைகளுக்கே நாம் செலவிடவுள்ளோம்.
ஆனால் மாநகர சபை முதல்வர் யாழ்ப்பாண மக்களின் வரிப்பணத்தில் இதுவரை 2 வாகனங்கள் கொள்வனவு செய்து ஆடம்பர வாழ்க்கையினை வாழ்ந்து வருகின்றனர்.
அதன்படி பதவியேற்ற பின்னர் 65 இலட்சத்திற்கு முதல் வாகனத்தை முதல்வர் கொள்வனவு செய்திருந்தார்.
எனினும் குறித்த வாகனம் விபத்து ஒன்றில் சிக்கியது. இதனால் அதற்கான காப்புறுதியைப் பெற்றும் மேலும் 13 இலட்சம் ரூபா சேர்த்து 78 இலட்சத்திற்கு இரண்டாவது வாகனம் கொள்வனவு செய்யப்பட்டு சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்.
இதில் இருந்து அறிந்து கொள்ள முடியும் சொகுசில போறது என்று. இவ்வாறான முதல்வரின் கூற்று மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து திருப்பும் செயற்பாடு ஆகும்.
அத்துடன் மாகாண முதலமைச்சர், அமைச்சர்களுக்கு வாகனம் வழங்குவது என்பது வடக்கு கிழக்கிற்கு மட்டும் அல்ல இலங்கை பூராகவும் தான். மற்றைய மாகாண சபைகளைப் போல வடக்கு மாகாண சபை பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் சபை அல்ல. அதனால் இம்முறையே முதன்முதலாக வாகனங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றது.
எதிர்வரும் காலங்களில் குறித்த வாகனமே தொடர்ந்தும் வரவுள்ளவர்களுக்கு வழங்கப்படும். இம்முறை வாகன கொள்வனவிற்காக ஒதுக்கப்பட்ட நிதி அடுத்த ஆண்டுக்கு ஒதுக்கப்படாது.
தற்போது திணைக்கள அதிகாரிகள் கூட தனிப்பட்ட வாகனங்கள் வைத்திருக்கின்றார்கள். பல்வேறு வாகனங்கள் துஷ்பிரயோகங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
நேற்று முன்தினம் மாநகர சபை ஆணையாளரின் வானம் அல்லைப்பிட்டியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த வாகனம் அங்கு செல்ல என்ன காரணம்? ஆனால் நாங்கள் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அவைத்தலைவராகிய நானும் இரவல் வாகனம் தான் வாங்கி ஓடுகின்றோம்.
நான் பயன்படுத்தும் வாகனம் உள்ளூராட்சி அமைச்சினுடையது. அவர்கள் கேட்கும் போது நான் மீளவும் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால் நாம் என்ன நடையிலா எமது காரியங்களை செய்வது. அதற்கு தானா பலர் விருப்பப்படுகின்றார்கள்?
வாகனம் இருந்தால் தான் வேலைகளை உடனடியாக செய்து முடிக்க முடியும். எனவே வாகனக் கொள்வனவு அவசியம் தான். இவ்வாறான நிலையில் ஏனையோர் எம்மை விமர்சிக்க முடியாது என்றார்.
ஜாதிக ஹெல உறுமயின் முறைப்பாட்டிற்கு பதில் கடிதம்
ஜாதிக ஹெல உறுமய கட்சியால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு விளக்கமளிக்கும் கடிதத்தினை ஆணைக்குழுவிற்கு கடந்த 18ஆம் திகதி அனுப்பியுள்ளதாக சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட, பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்கக்கோரும் பிரேரணை தொடர்பிலான பிரதிகள் இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் தமிழ் மொழியில் அனுப்பப்பட்டிருந்தது.
இவ்வாறு தமிழில் அனுப்பியமையினால் மும்மொழிக் கொள்கை மீறப்பட்டுள்ளதாகக் கூறி ஜாதிக ஹெல உறுமயக் கட்சி, அரச கரும மொழிகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தது.
இதனையடுத்து, இது தொடர்பில் விளக்கம் கோரி ஆணைக்குழுவினால் எமக்குக் கடிதமொன்று அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்தக் கடிதம் தொடர்பாக விளக்கமளிக்கும் கடிததத்தினை தான் அனுப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அரசியலாக்கவேண்டாம்
மே.18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அரசியலாக்கும் செயற்பாட்டில் எவரும் ஈடுபடமுடியாது.மே.18 என்பது ஒரு புனிதமான தினம். அதனை புனிதமான முறையில் கொண்டாடவேண்டும் என்பதுடன், அந்த தினத்தில் மட்டும் கொண்டாடப்படவேண்டும். மே 22 ஆம் திகதி இடம்பெற்ற வடமாகாண சபை அமர்வில் கறுப்புப் பட்டி அணிவது தொடர்பிலே எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சியினரால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், அன்றைய தினம் தீபம் ஏற்றப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டது. தீர்மானிக்கப்பட்டபடி நடைபெறாமையினாலேயே நான் தீபமேற்றி அஞ்சலி செலுத்தும் போது கலந்துகொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.