ஈராக்கில் ஷியா அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி உள்நாட்டுப் போரை நடத்தி வரும் சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு சர்வதேச அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஈராக்கின் வடக்குப் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம், தலைநகர் பாக்தாத் நோக்கி முன்னேறி வருகிறது.
இந்நிலையில் இதை எதிர்த்து அமெரிக்கா ராணுவ நடவடிக்கையில் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வாஷிங்டனில் அமெரிக்கா அதிபர் ஒபாமா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அல்கொய்தா அமைப்பின் துணை அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். சர்வதேச அளவில் நீண்ட காலத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும். ஈராக், சிரியா அரசுகளுக்கு எதிராக இயங்கிவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமெரிக்காவின் நட்பு நாடுகளில் ஒன்றான ஜோர்டான் மீதும் போரை தொடுக்க முயற்சிக்கிறது.
இப்படி அரசுகளுக்கு எதிரான செயற்பாடுகளினால் செயற்கையான வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது இந்த அமைப்பு. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பானது ஆயுதங்கள் மற்றும் மிகப்பெரிய ஆள்பலத்தின் மூலம் யுத்தத்தில் இறங்குகிறது.
அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் இந்த அமைப்பு ஈடுபடலாம். இதனால் அமெரிக்கா இந்த அமைப்பை தீவிரமாக கண்காணிக்கிறது. இவ்வாறு ஒபாமா கூறினார்.