இனந்தெரியாத நபரினால் தொலைபேசி மூலம் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, நேற்று காலை 10.46 மணி தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது நான் கூட்டம் ஒன்றில் இருந்தால் தொடர்பை எடுத்துக் கொள்ளமுடியவில்லை.
அதன்பின்னர் பிற்பகல் 2.52மணிக்கு நான் குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை எடுத்தேன். அவ்வாறு எடுத்து நான் சிறிதரன் கதைக்கின்றேன் நீங்கள் யார் என்று கேட்டேன்.
அப்போது குறித்த நபர் தூய தமிழில் தகாத வார்த்தைகளால் என்னுடன் பேசினார். அத்துடன் கூட்டமைப்பில் உன்னைப்போன்ற ஆட்கள் முஸ்லிம்களுக்கு வால் பிடித்து திரிகிறீங்கள் உங்களை உயிருடன் விட்டு வைக்க கூடாது.
ஒரு வாரகாலத்திற்குள் உனக்கு சாவு தான் என அச்சுறுத்தும் பாணியில் பேசினார். எனினும் நான் எதுவும் கூறாது கேட்டுக் கொண்டு இருந்துவிட்டு தொடர்பை துண்டித்துக் கொண்டேன்.
அதனையடுத்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை சம்பவம் குறித்து முறைப்பாடு செய்தேன் .
அது தொடர்பில் இன்று காலை என்னிடம் மேலதிக விபரங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர் என்றார். எனினும் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதாகவும் அதனையடுத்தே மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.