நாட்டில் சீர்கெட்டு வரும் சிங்கள – முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தாம் முஸ்லிம் பெண்ணொருவரை திருமணம் செய்ய விருப்பத்துடன் இருப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
களனியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முஸ்லிம் பெண்ணை தான் திருமணம் செய்தால், முஸ்லிம்களும் சிங்களவர்களும் இரத்த சொந்தங்களாக மாறுவார்கள் எனவும் இதனை முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்வார்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இனவாதம், மத மற்றும் வகுப்பு வாதங்கள் நாட்டில் இல்லை. துரதிஷ்டவசமாக அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்கள் நடந்தன. ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நான் அந்த பிரதேசங்களுக்கு சென்றேன்.
அந்த பிரதேசங்களில் உயிர்கள் இழக்கப்பட்டன. சிங்கள மற்றும் முஸ்லிம் என இரண்டு தரப்பு மக்களின் சொத்துக்களுக்கு அழிவுகள் ஏற்பட்டன.
முஸ்லிம்கள் எமது இரத்த சொந்தங்கள், அவர்கள் எமக்கு பெண்களை மணம் முடித்து கொடுப்பதில்லை. ஆனால் சிங்கள பெண்களை மணந்துள்ளனர்.
முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கும் பெண்களை மணமுடித்து கொடுக்க முயற்சிக்க வேண்டும்.
அப்படி பெண்ணை தருவதாக இருந்தால், எனது மனைவி மற்றும் பிள்ளைகள் என்னை திட்டினாலும் பரவாயில்லை தேசிய ஒற்றுமைக்காக நான் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய தயாராக இருக்கின்றேன்.
முஸ்லிம் பெண்ணை மணந்து கொண்டால், நான் முகத்தை மூடிக் கொண்டு எந்த சண்டைக்கு வேண்டுமானாலும் போக முடியும் எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.