சிறுபாண்மை மக்களுக்கு எதிராக செயற்படும் இந்த இனவெறி ஆட்சியை தூக்கி எறிவதற்கு எவ்வித கட்சி பேதமோ, இனபேதமோ, மதபேதமோ இன்றி நாட்டின் அனைத்து மக்களும் வீதியில் இறங்கி போராட முன்வர வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
அளுத்கம பேருவளை பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைக்கு எதிராக சமவுரிமை இயக்கத்தினர் நேற்று புதன்கிழமை கோட்டை புகையிர நிலையத்திற்கு முன்னாள் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசினால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவாத யுத்தத்திற்கு அடுத்தப்படியாக மஹிந்த ராஜ பக்ஷவினால் இலங்கையில் சிறுபான்மை இனத்தினரின் இன்னொரு பகுதியினரான முஸ்லிம் மக்கள் மீது அரச படைகளின் ஆதரவுடன் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இவ் தாக்குதல் மூலம் தேசிய சிறுபான்மை மக்களின் வாழ்க்கை கேள்விக்குரியாகியுள்ளது.
அரசானது சிங்கள மக்களை ஏனைய சிறுபான்மை மக்களுக்கு எதிராக தூண்டி இனவாதத்தை கொழுந்து விட்டு எரிய விடுவதன் மூலம் தமது வாக்கு வங்கியை நிரப்பி மீண்டும் ஆட்சி பிடத்தில் அமர்ந்திருக்கவே இவ்வாறான இனவாத தாக்குதல்களை நாட்டில் கட்டு அவிழ்த்து விடுகின்றது. எனவே இவ்வாறான அரசின் சதி திட்டங்களில் சிங்கள மக்களோ, தமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ பலியாகிவிடாமல் நிதானமாக சிந்தித்து செயற்பட வேண்டிது அவசியமாகும்.
அளுத்கம -பேருவளை பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி அவர்களை சொந்த வீடுகளுக்கு மீள் குடியேற்றி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென நாங்கள் அரசுக்கு வலியுறுத்துவதோடு இவ் வன்முறைக்கு காரணமானவர்கள் எந்த நபர்களாலும் எந்த பதவிகளில் இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் உரிய விசாரணைகள் மூலம் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என தெரிவித்தார்.