முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு மன்னார் ஆயர் கண்டனம்

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வன்முறையை தமிழ் சிவில் சமூக அமைப்பு வன்மையாக கண்டிப்பதாக தமிழ் சிவில் சமூக அமைப்புக்களின் சார்பில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.

mannar-ayar

இது தொடர்பில் நேற்று மாலை அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் தென் மேற்குப் பகுதியில், குறிப்பாக அளுத்கம மற்றும் பேருவளையில், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை தமிழ் சிவில் சமூக அமையம் வன்மையாக கண்டிக்கின்றது.

வன்முறையில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு எமது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு இந்தக் கடினமான வேளையில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எமது முழுமையான சகோதரத்துவ ஆதரவையும் விளங்கிக்கொள்ளலையும் வெளிப்படுத்துகிறோம்.

இத்தாக்குதல்களுக்கு காரணாமான பிரதான காரணகர்த்தாக்கள் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதையிட்டு கலக்கமடைகின்ற போதிலும் நாம் ஆச்சரியப்படவில்லை.

இத்தாக்குதல்களுக்கு மூல காரணமாக இருந்தோர் பாதுகாப்புத் துறையின் மேலிடத்தோடு நெருக்கமாக இருப்பவர்கள் என்பதால் நாம் ஆச்சரியப்படவில்லை. நாங்கள் இதில் ஆச்சரியப்படாமைக்கான மற்றொரு காரணம் இத்தகைய வன்முறைகள் முன்னர் இடம்பெற்ற போதெல்லாம் சட்டத்தின் மௌனம் தொடர்ந்து நிலவி வந்தமையினால் ஆகும். இது இலங்கை வரலாற்றின் ஒரு அம்சமாகும்.

இவ் வன்முறைகள் இயல்பாக (திட்டமிடாமல்) நடைபெற்ற ஒன்றாகவோ, ஒரு புதிய நிகழ்வாகவோ விளங்கிக் கொள்ளப்படக் கூடாது. தாக்குதல்களின் ஆரம்ப கட்டத்தில் கிடைக்கப்பட்ட, நன்கு உய்த்தறியப்பட்ட செய்திகள் இத்தாக்ககுதல்களை நடாத்தியவர்களை தடுத்து நிறுத்துவதற்கு காவல் துறையினரோ விசேட அதிரடிப் படையினரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

வெகு நீண்ட காலமாக சிங்கள பௌத்த அரசினால் இந்நாட்டின் ஏனைய சமூகங்கள் மீது, அவர்கள் சமூக, கலாச்சார, அரசியல் பொருளாதார ரீதியாக முன்னேறக் கூடாது, அதற்கு இடமளிக்கக் கூடாது, என்பதை நோக்கமாகக் கொண்டு, கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல்களின் ஓர் அங்கமாகவே அழுத்கமவில் நடந்த தாக்குதல்களும் பார்க்கப்பட வேண்டும்.

இந்தத் தாக்குதல்களின் காரணகர்த்தாக்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்படுவது முக்கியமே. ஆனால் அது போதுமானதாக இருக்காது. இப்பிரச்சினை ஒரு குறிப்பட்ட அமைப்பு தொடர்பானதோ அல்லது ஒரு கட்சி தொடர்பானதோ அல்ல. இப்பிரச்சினை இலங்கையில் ஒரு வேரோடிப் போன பிரச்சினை. இது விளங்கப்படாவிட்டால், இதில் மாற்றம் வராவிட்டால் அழுத்கமவில் நடந்தவை இவ்வாறன தாக்குதல்களின் வரலாற்றின் முடிவான அத்தியாயம் அல்ல என்றே நாம் கருதுகிறோம்.

அளுத்கம எமக்கு ஞாபகப்படுத்தும் இந்த சிக்கலான புரிதலை விளங்கிகொள்ளவும் அதன் அடிப்படையில் செயற்படவும் அனைவரையும் வேண்டுகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts