அளுத்கம சம்பவத்தைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

Kajentherakumarஅளுத்கமவில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறையினைக் கண்டித்து யாழ்.மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கவனயீர்ப்புப் போராட்டத்தினை நடத்தவுள்ளதாக அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதன்கிழமை (18) தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

‘தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இணைந்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

தென்னிலங்கையில் திட்டமிட்ட முறையில் முஸ்லீம் மக்கள் மீது பேரினவாத சக்திகள் மேற்கொண்ட இனவாத செயற்பாடுகள், சொத்தழிப்புகள் மற்றும் உயிர்ப் பறிப்புக்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது. இந்தப் போராட்டம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் தலைவர்களையும் உள்வாங்கிய நிலையில் நடைபெறவுள்ளன.

தமிழ் மக்கள் கடந்து 65 ஆண்டுகளாக இத்தகைய இனவாத நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்களிற்கு உள்ளாகி வந்துள்ளார்கள்.

தமிழ் பேசுபவர்கள் ஒன்றிணைந்த செயல்பட வேண்டியது அவசியமாகும். தமிழ் இனத்தின் முள்ளந்தண்டை முள்ளிவாய்க்காலில் உடைத்த நிலையில், அடுத்த கட்டமாக சிங்கள தேசம் திட்டமிட்ட முறையில் முஸ்லிம் மக்களையும் அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.

கிழக்கு மாகாணத்தில் நன்கு திட்டமிட்ட முறையில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அரசாங்கத்தினாலும் அரசாங்க ஒட்டுக் குழுக்களினாலும் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்கிடையில் குழப்பங்களை உருவாக்க அரசாங்கமும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும் ஒட்டுக் குழுக்களும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.

இதேவேளை வடபுலத்தில் தமிழ் மக்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியில், அரசாங்கம் முஸ்லிம் மக்களைப் பயன்படுத்தி குழப்பங்களை உண்டாக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

தென்னிலங்கையில் தமிழ்மக்கள் ஆதிக்கம் செலுத்திய பொருளாதாரத்தை 1983 ஆம் ஆண்டு அழித்தது போன்று, இன்று முஸ்லிம் மக்கள் தென்னிலங்கையில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் பொருளாதார நடவடிக்கைகளை அழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதனை நாம் வெறுமனே ஒரு சில பேரினவாதிகளின் செயற்பாடாக கருதி, இத்தகைய செயற்பாடுகளை மறந்து விடுவது பிழையானதாகும். நாம் கற்றுக் கொண்ட பாடங்களை மறந்து விடாது, ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் இணைந்து செயற்பட வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

ஏற்கனவே, இவ்வாறான கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts