வடமாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, துணுக்காய் பிரதேச செயலர் சி.குணபாலன் உள்ளிட்ட குழுவினர் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பன்றிவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள கருங்கற் சுரங்கங்களை நேற்று செவ்வாய்க்கிழமை (17.06.2014) பார்வையிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் மற்றும் மல்லாவி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இடங்களில் முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் மக்கள் சந்திப்புக்காகச் சென்றிருந்தபோதே பன்றிவெட்டிக் கருங்கற் சுரங்கங்களுக்கும் சென்று அவதானித்துள்ளனர்.
புவிச்சரிதவியல் அளவை சுரங்கப்பணியகத்தால் 12 மீற்றர்கள் ஆழத்துக்கு மாத்திரமே கல் அகழலாம் என அனுமதிக்கப்பட்டபோதும், பல இடங்களில் 16 மீற்றர்கள் ஆழத்துக்கும் அதிகமாகக் கல் உடைக்கப்பட்டிருப்பது இதன்போது அவதானிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அவருடன் கூடவே சென்றிருந்த வடமாகாண சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் அனுமதிக்கப்பட்ட ஆழத்துக்கு மேலதிகமாக அகழப்படுவதைத் தடுத்து நிறுத்த உடன் ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும், வளங்களைப் பயன்படுத்தி கொள்ளை இலாபம் ஈட்டும் தென் இலங்கை நிறுவனங்கள், தமது வருவாயில் எவ்வளவு தொகையை வடக்கின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தியுள்ளது என்பது தொடர்பான விபரங்களைத் தமக்குத் தருமாறும் பொ.ஐங்கரநேசன் பிரதேசச் செயலரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கல்லுடைக்கும் நிறுவனங்கள், கல் உடைப்பதால் ஏற்படும் பாரிய குழிகளை நிரப்பி அப்பிரதேசத்தில் மரங்களை வளர்த்து மீளவனமாக்கலை மேற்கொள்ளவேண்டும் என்பதே வழமையான நடைமுறையாகும். ஆனால், இயன்ற வரையில் கற்களைத் தோண்டியெடுத்துக் காசாக்கும் நிறுவனங்கள் சுரங்கங்களை மீளவும் நிரப்பி மூடுவதற்குச் செலவழிக்க விரும்புவதில்லை.
மேற்குறிப்பிட்ட சுரங்கங்களிலும், உள்ளே சேர்ந்திருக்கும் தண்ணீரைச் சாட்டாக வைத்து அதில் மீன்குஞ்சுகளை விட்டு வளர்க்கவும் அல்லது கழிவுகளைக் கொட்டும் இடமாகப் பயன்படுத்தவுமே கல் அகழும் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஆனால், இரண்டுமே அப்பிரதேசத்தின் சுற்றுச்சூழலை மோசமாகப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் துணுக்காய் பிரதேச செயலர் சி.குணபாலனிடம் சுரங்கப்பகுதிகளில் மீளவனமாக்கலைத் தவிர வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் எனவும் பணித்துள்ளார்.
கருங்கல் சுரங்கங்களைப் பார்வையிட்ட குழுவில் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் மற்றும் துணுக்காய் பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.