மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, இன்று புதன்கிழமை (18) காலை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தினை நோக்கி பேரணியொன்றை நடந்தவுள்ளதாக, முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களின் செயல்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, நிரந்தர முடிவொன்றை எடுப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுப்பதனூடாக, தமிழகத்திற்கும் எங்களுக்குமாக தொப்புள்கொடி உறவை வலுப்படுத்த உதவவேண்டும் என்பது முதலாவது கோரிக்கையாகும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய அரசாங்கம் 50,000 வீட்டுத் திட்டத்தினை நடைமுறைப் படுத்தியுள்ள போதிலும், அதன் செயல்பாடுகள் மந்த கதியிலேயே நடைபெற்று வருகின்றன. இதனை துரிதப்படுத்துவதோடு, மேலும் 10,000 பேருக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு இந்தியப் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கையாகும்.
13ஆம் திருத்தச் சட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்யாமல், அதில் குறிப்பிடப்பட்ட அனைத்து சரத்துகளையும் உடனடியாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது மூன்றாவது கோரிக்கையாகும்.
இந்த மூன்று அம்ச கோரிக்கைகளையும் முன்வைத்து, இன்று புதன்கிழமை (18) காலை 10 மணிக்கு, யாழ். கைலாசப் பிள்ளையார் கோவில் முன்றலிலிருந்து பேரணி ஆரம்பமாகி, நாவலர் வீதியிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தை அடைந்து, எமது மகஜரினை அங்கு கையளிக்கவுள்ளோம் என விஜயகாந்த் மேலும் தெரிவித்தார்.