ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் பிரிட்டிஷ் தூதரகத்தை துவக்கவிருப்பதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பான ஏற்பாடுகள் முடிவடைந்த உடன் இந்த தூதரகம் செயற்படத்துவங்கும் என்றும் இந்த தூதரகத்தை அங்கே துவக்குவதற்கு ஏதுவான சூழல் உருவாகியிருப்பதாகவும் ஹேக் தெரிவித்திருக்கிறார்.
ஈராக்கில் மும்முரமாகியிருக்கும் சுன்னி ஆயுதக்கிளர்ச்சியை கையாள்வது எப்படி என்பது தொடர்பிலான மேற்குலக நாடுகளின் தீவிர பரிசீலனைக்கு மத்தியில் ஈரானுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான உறவை சீரமைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இந்த அறிவிப்பு ஈரானுக்கும் மேற்குலகுக்கும் இடையிலான உறவு மேம்படுவதற்கான மற்றொரு சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.
2011 ஆம் ஆண்டு பிரிட்டன் ஈரானுடனான தனது ராஜாங்க உறவை முற்று முழுதாக துண்டித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.