இலங்கை,பொலிவிய ஜனாதிபதிகளுக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம் பெற்றது

mahinthaஜி 77 குழுவின் பொன்விழா ஞாபகார்த்த அரச மற்றும் அரசாங்க தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பொலிவியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் திங்கட்கிழமை (16) பொலிவியா ஜனாதிபதி மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதி ஈவோ மொரலெஸ் ஐமா அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

இலங்கைக்கு ஒத்துழைப்பு நல்க தான் தயாராக இருப்பதாக மொரலெஸ் தெரிவித்தார்.

தமது பொலிவிய விஜயம் தென் அமெரிக்க அரசுகளுடன் இராஜதந்திர உறவுகளுக்கும்
பொருளாதார வர்த்தக தொடர்புகளுக்கும் புதிய ஆரம்பமாக அமையுமென தெரிவித்த ராஜபக்ஷ அவர்கள் புதிய நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொள்வது தமது அரசாங்கத்தின் கொள்கையாகும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் அரசியல் பொருளாதாரம், கைத்தொழில், இறக்குமதி, ஏற்றுமதி ஆகிய
துறைகளைப்பற்றிய தகவல்களை கேட்டறிந்த மொரலெஸ் அவர்கள் இலங்கையின் ஆடைக் கைத்தொழில் தொடர்பாக விசேட அக்கறை காட்டுவதாகக் குறிப்பிட்டார்.

பொலிவியாவின் ஆடைக் கைத்தொழிலை முன்னேற்றுவதற்கு உதவி செய்ய முடியுமா என ராஜபக்ஷ அவர்களை கேட்ட அவர், ஆடைக் கைத்தொழிலை ஆரம்பிப்பதற்காக இலங்கையில் இருந்து சிறப்பு அறிஞர்கள் குழுவொன்றை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.

அதற்கு ராஜபக்ஷ அவர்கள் சம்மதம் தெரிவித்தார்.

பொலிவியா இலங்கையிலிருந்து கறுவாவை இறக்குமதி செய்ய வாய்ப்புண்டா என்பதைப்பற்றி விசாரித்த பொலிவியா ஜனாதிபதி நீர், மின்சார உற்பத்தி ஆகிய துறைகளில் இலங்கையின் அனுபவத்தை பகிர்ந்துகொள்ள தமது நாடு விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்யும்படி ராஜபக்ஷ அவர்கள் விடுத்த அழைப்பை பொலிவிய ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்ததன் பின்னர் இலங்கை அடைந்துள்ள
முன்னேற்றத்தைப்பற்றி விபரித்த ராஜபக்ஷ அவர்கள், அம் முன்னேற்றத்தை பொருட்படுத்தாமல் மனித உரிமைகளை ஆயுதமாகக் கொண்டு சில நாடுகள் தாக்கம் ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார்.

இத்தகைய பிரச்சினை தனது நாட்டுக்கு கடந்த காலத்திலும் தற்பொழுதும் இருப்பதாக பொலிவிய ஜனாதிபதி தெரிவித்தார்.

இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் பொலிவிய மாளிகை முன்றலில் கோலாகலமான இராணுவ மரியாதை வழங்கப்பட்டது. அச் சந்தர்ப்பத்தில் மொரலஸ் அவர்களும் கலந்துகொண்டார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷெனுக்கா செனவிரத்ன, திரைப்பட அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் ரவீந்திரரந்தெனிய ஆகியோரும் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

Related Posts