சமூக சேவைகள் அமைச்சால் வழங்கப்படும் பயன்களை அமைச்சின் கீழுள்ள உத்தியோகத்தர்கள் மூலம் அனைத்துப் பொதுமக்களும் பெறவேண்டுமென சமூக சேவைகள் அமைச்சின் சமூக பராமரிப்பு நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் செல்வி. மனோல் குறுப்பு தெரிவித்தார்.
சமூக பராமரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட சமூக சேவை அமைச்சின் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘பொதுமக்களில் சிலர் ஒவ்வொரு சமூக சேவைகள் உத்தியோகத்தர்களிடமிருந்தும் தனித்தனியாக தங்களுக்கு தேவையான பயன்களை பெற்றுவிடுகின்றனர். இதனால், ஏனைய பொதுமக்கள் ஒரு பயனையும் பெறமுடியாதுள்ளனர்.
இந்நிலையில், சமூக சேவைகள் அமைச்சின் கீழுள்ள உத்தியோகத்தர்கள் ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டும். இதன் மூலம் ஒருவர் 02 அல்லது 03 பயன்களை பெறுவதை தவிர்க்கமுடியும்.
வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு உதவுவதற்காக வடமாகாணத்தில் 27 சமூக பராமரிப்பு நிலையங்கள் உள்ளன. மேலும் 06 சமூக பராமரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு சமூக சேவைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது’ என்றார்.
இச்செயலமர்வில் சமூக சேவை உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், உளவள உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சமூக அபிவிருத்தி உதவியாளர்கள், முன்பிள்ளை பராய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.