யாழ். கோண்டாவில் பகுதியில் வீடு புகுந்து இன்று திங்கட்கிழமை (16) இரவு நடத்திய வாள்வெட்டில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியதுடன், இருவர் படுகாயமடைந்து மாலை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் கோண்டாவிலினைச் சேர்ந்த ரவீந்திரன் சுகிர்தன் (19) என்பவர் பலியாகியதுடன், சகோதரர்களான ரவீந்திரன் லக்ஸணா (26), ரவீந்திரன் செந்தூரன் (23) ஆகியோரும், உரும்பிராயினைச் சேர்ந்த டி.றொபின்ராஜ் (20), எம்.நிராஜன் (23) ஆகியோரும் படுகாயமடைந்தனர்.
இது பற்றித் தெரியவருவதாவது,
சுகிர்தன் இன்று (16) பிற்பகல் வீட்டிற்கு முன்னால் நின்றிருந்த வேளையில் அவ்வீதியின் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற சிலர் சுகிர்தனினை காலால் உதைந்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இதனை அவதானித்த சுகிர்தனின் உறவினர்கள் குறித்த மோட்டார் சைக்கிள்காரர்களைத் துரத்திச் சென்று அவர்களில் இருவரைப் பிடித்து நையப்புடைத்தனர். இதில் றொபின்ராஜ், நிரோஜன் ஆகியோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக படுகாயமடைந்த இருவரின் நண்பர்கள், 7 மோட்டார் சைக்கிள்களில் சுகிர்தனின் வீட்டிற்கு இன்று (16) இரவு சென்று வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் சுகிர்தன் பலியாகியதுடன், சகோதரர்கள் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் ஆத்திரம் கொண்ட சுகிர்தனின் உறவினர்கள், உரும்பிராய்ப் பகுதிக்குச் சென்று வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிராஜன் என்பவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் குடாநாட்டில் சமீபகாலத்தில் வாள்வெட்டுக்களும் திருட்டுக்களும் மோசடிகளும் அதிகரித்து வருவது குறித்து மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். சட்டம் ஒழுங்கு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசாரின் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.அரசியல் நடவடிக்ககைகளில் உள்ள புலனாய்வு நடவடிக்ககைகளை பொதுமக்கள் பாதுகாப்பு விடயத்தில் மேற்கொள்வதில்லை எனவும் பெரும்பாலான தருணங்களில் குற்றவாளிகள் கைதுசெய்யப்படுவதில்லை எனவும் குற்றம் நடைபெறுவதனை தடுப்பதற்குரிய பொலிசாரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவும் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் அவதானிப்பு கூடாரங்கள் அதிகரிக்கப்பட்டு ரோந்துகள் தீவிரப்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தினை இச்சம்பவங்கள் எடுத்துக்காட்டுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.