வடமாகாண முதலமைச்சர். சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்திருந்தபோதும், தமிழ் மக்களுக்கு துரோகம் விளைவிக்கின்ற வகையில் விமல் வீரவன்ச பேசுகின்ற காரணத்தால் இந்நிகழ்வில் தான் கலந்து கொண்டால் தன்னையும் தமிழ் மக்கள் துரோகம் இளைத்தவராக பார்ப்பார்கள் என, இணையத்தளம் ஒன்றிற்கு முதலமைச்சர் தெரிவித்திருந்ததாக பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
வீடமைப்பு அதிகார சபையின் 100 மில்லியன் ரூபா நிதியில் புனரமைப்புச் செய்யப்பட்ட, குருநகர் மாடிக் கட்டத்தொகுதியிலுள்ள வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எந்த விதமான அரசியல் வேறுபாடுகளும் இன்றி இது மக்களின் நம்மைக்காக செய்யப்படுகின்ற காரியம். எனவே இதில் முதலமைச்சர் கலந்து கொள்வார் என எதிர்பார்த்தோம். அது மட்டுமின்றி அவருடைய பெயரையும் அந்த நினைவுக்கல்லிலே பொறித்துள்ளோம்.
எல்லா விடயங்களிலும் நாங்கள் வாதத்தை வைத்து சிந்திக்கவில்லை. வாதத்தை வைத்து சிந்தித்து செயல்பட்டால் நாங்கள் அழிந்து விடுவோம்.
இடிந்து போய் இருந்த இந்த குடிமனையில் இருந்தவர்கள் தமிழ்மக்கள். விக்னேஸ்வரன் குறிப்பிடுகின்ற இந்த துரோகி (தான்) என்ன செய்திருக்கின்றான். 100 மில்லியன் ரூபாயினை பெற்று 160 குடும்பங்களுக்கு உதவியுள்ளேன். அப்படியாயின் இப்படியான துரோகிகள் எத்தனை பேர் வேண்டுமானாலும் தமிழ் மக்களுக்கு இருக்கலாம்.
இங்கே தமிழ்மக்களின் கூட்டாளிகள் நண்பர்கள் என்ன செய்திருக்கின்றார்கள் அவர்கள் எங்களை பார்த்து துரோகி என்கிறார்களே அவர்கள் தவிர வேறு என்ன தமிழ் மக்களுக்கு செய்தனர்.
உங்களுடைய பொது வசதிகளை பெற்றுத் தருவதற்கு அவர்களுக்கு விருப்பம் இல்லை. உங்களுக்கு பொது வசதிகளை பெற்று தராமல் எப்போதும் நீங்கள் பிரச்சனைக்குள் இருக்க வேண்டும்.
அப்போது தான் சிங்கள அரசாங்கம் தான் இதற்கெல்லாம் காரணம் எனக்கூறமுடியும். அத்துடன், அதனை மாற்றுவதற்கு போராட வேண்டும் என மீண்டும் அப்பாவி தமிழ் மக்களை பலிக்காடா ஆக்குவதற்கு முயற்சிக்கின்றார்கள்.
எங்களுக்கு இன பேதம் மத பேதம் இல்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் நாட்டிலே சாந்தியும் சமாதானமும் ஏற்பட்டுள்ளது. அதனை ஏற்படுத்த அந்த ஒரு (யுத்தம்) வழிதான் இருந்தது. வேறு வழி இருந்திருந்தால் நாட்டிலே எப்போதே சமாதானத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
ஒரு நோயாளியைக் குணப்படுத்த வைத்தியர்கள் சத்திர சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினால் சத்திர சிகிச்சையை செய்ய வேண்டும். சத்திர சிகிச்சை செய்தால் இரத்தம் வழிந்தோட தான் செய்யும். எனவே கத்தி எடுத்து வெட்டினார்கள் மீண்டும் மருந்து போட்டு அதை மூடி மறைத்தார்கள். இப்போது நோயாளி சுகப்பட்டுவிட்டார்.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பானது, ‘இதோ இந்த இடத்தில் தான் சிங்கள வைத்தியர்கள் சத்திரசிகிச்சை செய்தார்கள்’ என காட்டிக்காட்டி மீண்டும் 30 வருடம் பின்நோக்கி செல்ல முயற்சி செய்கின்றார்கள்.
அந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நோயாளியை குணப்படுத்திய நாட்டினுடைய தலைவருக்கும் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கும் எதிராக சர்வதேச ரீதியில் பல விடயங்களை மேற்கொள்கின்றார்கள்.
இவர்களால் மேற்கொள்ளப்பட்ட விடயங்களால் இப்போது அந்த சர்வதேச சக்திகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வர முயற்சிக்கின்றார்கள். அவர்கள் இங்கே வந்து தமிழ் மக்கள் கூட்டாக கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற கருத்தை உருவாக்கி அதை முழு உலகுக்கும் வெளியிட முயற்சிக்கின்றார்கள்.
எனவே இந்த சந்தர்பத்திலே நாம் செய்த தவறு என்ன என்று கேட்கின்றோம்?. யுத்தத்தால் அழிந்த கட்டிடங்களை மீண்டும் புனரமைப்பு செய்தது தவறா?, வீதிகளுக்கு காப்பெட் போட்டது தவறா?, மின்சாரம் பெற்று தந்தது தவறா?, மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் சூழ்நிலையை செய்து தந்தது தவறா?,.
யுத்தத்தினால் தம்முடைய வாழ்கையினை இழந்த சிங்களக் குடும்பங்களும் இருக்கின்றனர். அதேபோல யுத்தத்தால் உயிரிழந்தவர்களை கொண்ட தமிழ் குடும்பங்கள் எவ்வளவு வேதனை அடைகின்றதோ அதேபோல யுத்தத்தால் உயிரிழந்தவர்களின் சிங்கள குடும்பங்களும் வேதனை அடைகின்றனர்.
அந்த இருள் சூழ்ந்த யுகத்தை மீண்டும் மீண்டும் எடுத்து பேசுவதன் மூலம் எனக்கும் உங்களுக்கும் கிடைக்கக்கூடிய நன்மை தான் என்ன?. எனவே அந்த இருள் சூழ்ந்த அந்த காலத்தை மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டி உங்களுடைய பிள்ளைகளையும் அந்த காலத்திற்கு கொண்டு செல்வதா, அல்லது அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுப்பதா என்பதே இப்போது உள்ள கேள்வி.
நாங்கள் இனவாத அரசியல் வாதியாக இருந்தால் எங்களுக்கு இந்த குருநகரிலுள்ள வீட்டுத் தொகுதியை புனரமைக்காமல் கொழும்பிலுள்ள வீட்டுத் தொகுதியை புனரமைத்து இருப்போம்.
நாங்கள் இந்த வீட்டுத் தொகுதியை புனரமைப்பு செய்ய தொடங்கியவுடன் வடக்கு கிழக்கு என பார்க்கவில்லை. எம்மால் செய்யக்கூடிய ஆகக் கூடுதலான வேலையை செய்துள்ளோம். அதேபோல எதிர்காலத்திலும் இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்பதையும் கூறிக் கொள்கின்றேன்.
இனவாத ரீதியில் நாங்கள் பிரிந்து வாழ்வதில் இருக்கக்கூடிய பெறுபேறுகள் என்ன தான் என்பதை சிந்தியுங்கள். சாதாரண மக்களுக்கு தேவையில்லாத இனவாதத்தை பேசுகின்ற சக்திகள் பற்றி சிந்தியுங்கள்.
எனவே சமாதானம் என்கின்ற அந்த கொடியை ஏந்தி நீங்களும் நாங்களும் ஒன்றாக இந்த நாட்டிலே வாழவேண்டிய நிலை இருக்க வேண்டும் என நீங்கள் சிந்திக்க வேண்டும் செயற்பட வேண்டும்.
தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய தென்னிந்திய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இலங்கையில் தனித்தமிழீழம் கோரி ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அது வெளிநாடுகளிலுள்ள புலம் பெயர்ந்தவர்கள் மத்தியிலே சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் என ஜெயலலிதா கூறியிருக்கின்றார்.
அவர் ஏன் அதனை தென்னிந்தியாவில் செய்யவில்லை. அதை அவர் அங்கே செய்திருக்கலாமே. தமிழ் கலாச்சாரம் பிறந்த பூமி அதுதான். எனவே அப்படியான நாடு ஒன்று தேவை எனின் அவர் அதனை அங்கே செய்திருக்கலாம்.
அங்கே செய்யாமல் உங்களையும் எங்களையும் பிரித்து வைத்து நாங்கள் இங்கே ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு கொண்டு இருப்போம், ஆனால் அவர்கள் அங்கே சந்தோசமாக இருப்பார்கள்.
ஆகவே, வெளிநாட்டில் இருக்கின்றவர்கள் சொல்வதற்கு நீங்கள் அகப்பட வேண்டாம். நாங்கள் ஒன்றாக இருந்து முன்னேறிச் செல்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.