ஐ நா விசாரணைக் குழுவின் முன்பாக சாட்சியம் அளிப்பவர்கள் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என்று இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.
ஒரு ஜனநாயக அரசின் ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமாக இருப்பவர் இப்படியான கருத்துக்களை வெளியிடுவது மிகவும் கவலைக்குரிய ஒரு விஷயம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் வெளிநாட்டு செய்தி தளத்திற்கு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உள்ளூர் ஊடங்களுக்கு வெளியிட்டுள்ள கருத்தானது, ஒரு அப்பட்டமான மிரட்டல் என்றும், ஒரு சாதாரண இலங்கைப் பிரஜை இறுதி கட்ட போர் தொடர்பில் தனக்கு தெரிந்ததை கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது, உண்மை வெளிவராமல் தடுக்க எடுக்கப்படும் ஒரு நடவடிக்கை.
இவ்வாறான ஒரு நிலைப்பாடு கண்டிக்கப்பட வேண்டியது, அந்தக் கருத்து தவறானது என சம்பந்தர் தெரிவித்தார்.
அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் தடைபட்டுள்ளன.அமைச்சரது இந்தக் கருத்தை சர்வதேச சமூகமும், ஐ நா அமைப்பும் உள்வாங்க வேண்டும்.
ஐ நாவின் விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதா, இல்லையா என்பதை நாடாளுமன்றமே முடிவு செய்யும் என்று ஜனாதிபதி கூறியுள்ளது புதிய விஷயம் அல்ல, அந்த குழுவுக்கு அனுமதியளிக்கப்படாது என்பதை அரசு முன்னரே தெட்டத் தெளிவாக கூறிவிட்டது.
இப்போது நாடாளுமன்றம் முன்பாக அப்படியொரு பிரேரணையைக் கொண்டு வருவதாகக் கூறுவது ஒரு கேலிக் கூத்து. இறுதிகட்டப் போரை தொடங்குவதற்கு முன்போ, அல்லது போர் நடைபெறும்போதோ நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணையை கொண்டுவராத அரசு, இப்போது ஏன் ஐ நா விசாரணை குறித்த முடிவை நாடாளுமன்றம் எடுக்கும் என கூறுகிறது என சம்பந்தர் தெரிவித்தார்.