இராக்கில் பெரிய நிலப்பரப்புகளின் கட்டுப்பாட்டைக் கையிலெடுத்த்துள்ள இஸ்லாமியவாத ஆயுததாரிகள் அடுத்த படியாக தமது தாக்குதலை தலைநகர் பாக்தாதுக்கு எடுத்துச் செல்லப்போவதாக கூறுகின்றனர்.
அல்கைதாவுடன் தொடர்புடைய அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். கடந்த புதனன்று மோசுல் நகரில் தமது பிடியை வலுப்படுத்தியிருந்தது, திக்ரித் நகரத்தையும் கைப்பற்றியிருந்தது.
சமர்ரா நகரில் அதன் படைகள் முன்னேறியபோது வான் படையின் உதவியோடு அரசாங்கத் துருப்புகள் அவர்களின் முன்னேற்றத்தை தடுத்திருந்தனர்.
வடக்கிலுள்ள கிர்குக் நகரில் இருந்து தேசிய படைகள் வெளியேறிவிட்டதை அடுத்து அந்த ஊர் தற்போது தமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக குர்த் படைகள் சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.
எழுந்துள்ள நெருக்கடியைச் சமாளிக்க நாடாளுமன்றம் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்ய வேண்டும் என பிரதமர் நூரி அல் மலிக்கி விரும்புகிறார்.
ஆனால் நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்கான எண்ணமோ திராணியோ அற்றவர்களாக அரச படைகள் தோன்றும் நிலையில், அவசர நிலையால் மட்டும் கிளர்ச்சிக்காரர்களின் முன்னேற்றத்தைத் தடுத்துவிட முடியுமா என்பது சந்தேகத்துக்குரியதுதான் என இராக்கிலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.