வல்வெட்டித்துறை நகர சபையில் தொடரும் முறுகல்: சபை நடவடிக்கைகளை முடக்கப் போவதாக எச்சரிக்கை

vallveddiவல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கிடையில் முறுகல் நிலை தொடர்ந்துவரும் நிலையில் குறித்த பிரச்சினைக்கு த.தே.கூட்டமைப்பின் தலைமை ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சபை நடவடிக்கைகளை முற்றாக முடக்கும் நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக 5 உறுப்பினர்கள் கூட்டாக கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த 2012ம் ஆண்டு தொடக்கம் மேற்படி சபையின் தலைவருக்கும் உறுப்பினர்கள் சிலருக்குமிடையில் முறுகல் நிலை தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில் நேற்றய தினம் சபையின் கூட்டம் நடைபெற்றிருந்தபோது ஊழியர்களுக்கான கொடுப்பனவு மற்றும் வாகனங்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தவிர்ந்த மற்றய கொடுப்பனவு களுக்கு 5 உறுப்பினர்கள் அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக அங்கீகாரம் வழங்க மறுத்துள்ள உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

சபையின் தலைவர் தொடர்ச்சியாக பல ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், சபையினை எதேச்சதிகாரமாக நடத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால்,எந்தவொரு கொடுப்பனவுக்கும் அங்கீகாரம் வழங்காமல் சபையின் நடவடிக்கைளை முற்றாக முடக்கும் வகையிலான நடவடிக்கையினை எடுக்கப் போவதாக தெரிவித்திருக்கின்றனர்.

குறிப்பாக அனைத்துக் கொடுப்பனவுகளுக்கும் அங்கீகாரம் மறுப்பதன் மூலம் ஊழியர்கள் போராட்டம், மக்கள் போராட்டம் போன்றன உருவாகும். அதனடிப் படையில் சபையின் நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிக்கும் நிலை உருவாகும் என அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் அவ்வாறான ஒரு நிலை உருவானால் அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே அவப்பெயர் உண்டாகும் என தெரிவித்திருக்கும் அவர்கள் அவ்வாறான அவப்பெயர் உண்டாவதற்கு முன்னதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை இவ்விடயம் தொடர்பாக தகுந்த நடவடிக்கையினை எடுககவேண்டும் என தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை நேற்றைய தினம் க.சதீஸ், கோ.கருணானந்தராஜா, க.ஜெயராஜா ஆகியோருடன், ஈ.பி.டி.பி கட்சி சாரந்த பிரதேச சபை உறுப்பினர் திருமதி கைலாயினி ஆகியோர் ஊடகங்களை சந்தித்திருந்ததுடன், மேலும் ஒரு பிரதேச சபை உறுப்பினரான சூ.செ.குலநாயகம் தமக்கு ஆதரவானவர் என தெரிவித்திருக்கின்றனர்.

உப தவிசாளர் க.சதீஸ் தலைமையில் மேற்படி பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றிருந்தது.

மேலும் கடந்த மாதம் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கட்சியின் ஒழுங்கு விதிகளுக்கு முரணாக நடப்பவர்கள் மற்றும் ஊழல் புரிபவர்கள், வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடிப்பவர்கள் உறுப்புரிமை நீக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் செயலாளர் நாயமுமான மாவைசேனாதிராசா சுட்டிக்காட்டியிருந்தார்.

Related Posts