தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்துக்கான எங்களது பயணத்தின் போது பல்வேறு தியாகங்களை செய்து நாங்கள் பெற்றுக் கொண்ட பொன்னான வாய்ப்பான வடக்கு மாகாண சபை இன்று செயலிழந்து காணப்படுகின்றது.
வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் தடையாக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் கூறிவருகின்றனர் உண்மையில் இதற்கு அரசாங்கம் தடையாக இருப்பதாக கூற முடியாது இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்குத் தடையாக இருப்பவர்கள் யார் என்பது பற்றி பகிரங்கமாக விவாதிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்றய தினம் (09) மல்லாவி பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் அவர்கள், அங்கு கூடிய வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுடனான சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மக்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக மாகாணசபை இருக்கின்ற நிலையில் அதன் செயற்பாடுகள் இன்று முடக்கப்பட்டுள்ளன. அதனை கைப்பற்றியிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படக் கூடாது என்கின்ற தங்களது சுயலாப அரசியல் இருப்பை நோக்கமாகக் கொண்டு மாகாண சபையை செயற்படுத்தாமல் காலம் கடத்தி வருகின்றது.
இது எமது மக்களுக்கு இளைக்கின்ற மாபெரும் துரோகமாகும். மாகாண சபை செயற்பாடுகளுக்கு தடையாக அரசாங்கம் இருக்கின்றது என அவர்கள் கூறி வருகின்ற நிலையில் அதுபற்றி பகிரங்கமான ஒரு விவாதத்தை பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் துறைசார்ந்தோர் முன்பாக நடத்துவதற்கு நாம் தயார் என்றும் அதில் கலந்து கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரா என்று வினவினார்.
எமது மக்களின் ஒளிமயமான எதிர்காலம் தான் தனது குறிக்கோள் எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சகல உரிமைகளையும் பெற்றவர்களாக நல்லதொரு வாழ்க்கையை எமது மக்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கக் கூடிய நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அதுவரையில் தனது செயற்பாடுகள் அயராது தொடருமெனத் தெரிவித்தார்.
அரசாங்கத்துடனான சமரசப் போக்கினை முன்வைத்து எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியுமென தான் நம்புவதாகவும் இதுவே நடைமுறை சாத்தியமான யதார்த்த வழிமுறை என சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள் அரசாங்கத்தை எதிர்த்துக் கொண்டு எமது மக்களின் பிரச்சினைகளை எவ்வகையிலும் தீர்க்க முடியாது எனத் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெறும் வீரவசனங்களை பேசிக் கொண்டிருக்காமல் குறைந்த பட்சம் அவர்கள் வசமுள்ள உள்ளுரட்சி சபைகள் மற்றும் மாகாண சபையின் ஊடாகவேனும் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வின் போது மல்லாவி பிரதான வீதி, ஆலயங்கள் புனரமைப்பு மீள்குடியேற்ற உதவிகள், உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அம்மக்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இக்கோரிக்கைகளை எற்றுக் கொண்ட அமைச்சர் அவர்கள் மக்களது கோரிக்கைகள் விரைவாகவும் படிப்படியாகவும் நிறைவேற்றப்படுமெனத் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் பிரதேச செயலர், அமைச்சரின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் ஜெயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.