வடமாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. அவ்வாறு அரசு தீர்மானம் எடுத்தால் அதனை வரவேற்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இனவாதிகளை ஓரம்கட்டிவிட்டு தமிழ் மக்களுக்கு சம உரிமைகளை வழங்கி நல்லிணக்கஆணைக் குழு வின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில், போக்குவரத்து மற்றும் சிறு சிறு குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை கையாளும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவது வரவேற்புக்குரியது.
விஷேடமாக வட மாகாணத்திற்கு இவ்வாறான பொலிஸ் அதிகாரங்களை வழங்கி பரீட்சார்த்தமாக அம் மாகாணத்தின் செயற்பாடுகளை அவதானிக்க முடியும்.
இவ்வாறு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படும் போது பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்.
அவ் ஆணைக்குழுவின் தலைவராகவும் அக்குழுவின் அதிக அதிகாரமுடையவராகவும் ஜனாதிபதியே இருப்பார். எனவே பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகள் தவறான வழியில் பயன்படுத்த முனைந்தால் அதனை ஜனாதிபதியால் மீளப் பெறமுடியும்.
எனவே இனவாதிகள் சொல்வதைப் போன்று பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் வட மாகாணம் பிரிவினைக்கான வழியை தயார்படுத்தும் என்பதில் உண்மையில்லை.
மாகாண சபையை அறிமுகப்படுத்தும் போதும் அதிகாரத்தை பரவலாக்கிய போதும் இந்திய வம்சாவளி மக்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கிய போதும் சிங்கள இனவாதச் சக்திகள் அவற்றை எதிர்த்தன. தமிழ் மக்களுக்கு எந்த உரிமையையும் வழங்கக் கூடாதென்பதே இக்கூட்டத்தின் பிறவிக் குணமாகும்.
இதனை மாற்ற முடியாது. எனவே இனவாதிகளின் கருத்துக்களை கவனத்தில் எடுக்காது தமிழ் மக்களுக்கு சம உரிமைகளை வழங்க ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்தோடு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறானதோர் நிலையில் எம்மீதான சர்வதேச அழுத்தங்களும் நீர்த்துப் போகும். அத்தோடு இந்தியாவின் பிரதமர் மோடி ஒரு போதும் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்க மாட்டார்.
ஏனென்றால் இந்தியா எப்போதும் இலங்கையின் இறையாண்மையை மீறாது மதிப்பளிக்கும். எனவே ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு மோடி செவி சாய்க்க மாட்டார்.
இலங்கையில் பிரிவினைக்கு தமிழ் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டுமெனக் கூறும் ஜெயலலிதா அப்படியானால் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுடன் இணைந்து வாழ்வதற்கும் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டுமென கூற வேண்டும் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.