வடபகுதி மக்களின் வீடில்லாத பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் முகமாக பாகிஸ்தான் அரசு முதற்கட்டமாக 130 மில்லியன் ரூபா செலவில் வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்வந்திருப்பதாக இலங்கைக்கான பாக். உயர் ஸ்தானிகர் காஸிம் குரைஸ் கண்டியில் தெரிவித்தார்.
இலங்கை மாணவர்களுள் ஆயிரம் பேருக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் (5) மாலை கண்டி ஜின்னா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற பரிசில்கள் வழங்கி வைக்கும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே உயர்ஸ்தானிகர் மேஜர் காமம் குரைஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாக். இலங்கை ஆகிய இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்தும் நோக்குடன் பாகிஸ்தான் அரசு இலங்கைக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றி வருகின்றது. அதன் ஒரு கட்டமாக இன்னும் ஓரிரு மாத காலத்துக்குள் முதற்கட்டமாக 130 மில்லியன் ரூபா செலவில் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவுள்ளோம்.
அதுபோன்று கடந்த 2005ம்ஆண்டு முதல் புலமை பரிசில் திட்டத்தின் வேலையற்றோர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் கணனி பயிற்சி, தையல் பயிற்சி போன்ற நிலையங்களை அமைத்து பயிற்சிகளை வழங்கி வருகின்றோம். மேலும் சுகாதார மேம்பாடுகளுக்காக வேண்டி ஆஸ்பத்திரிக்கு அம்புலன்ஸ் வண்டியும் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச பௌத்த நூதனசாலையொன்றை கண்டியில் நிறுவியுள்ளதுடன் பாடசாலைகளுக்கு கட்டிடவசதிகளும் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் இலங்கையில் இந்த முறையில் தமது கல்வியை மேற்கொண்டும் மாணவர்களினது கல்வி மேம்பாட்டை கருதி 1000 மாணவிகளுக்கு புலமை பரிசில்களை வழங்கும் வகையில் பல மில்லியன் ரூபா நிதியை பாகிஸ்தான் ஒதுக்கியுள்ளது என்றும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.