Ad Widget

தீவகத்தில் இயற்கைவளம் சுரண்டப்படுகின்றது – கஜதீபன்

Kajatheepan-tnaஅதிகாரத்தின் துணையுடன் அடாவடியாக தீவகத்தில் இயற்கை வளம் சுரண்டப்படும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.

உலக சூழல் தினத்தைக் கொண்டாடும் முகமாக வடமாகாண விவசாய, கமநல சேவைகள்,கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு நடத்திய உலக சூழல் தின நிகழ்வு அமைச்சின் செயலாளர் எம்.ஹால்தீன் தலைமையில் யாழ். மண்டைதீவு தெருவழிப்பிள்ளையார் கோவில் அருகில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

‘நீண்ட பல காலமாக மண்ணை மீட்பதற்காகவும் மீட்ட மண்ணை பாதுகாப்பதற்காகவும் தொடர்ச்சியாக போராடிவரும் ஓர் பரம்பரையைச் சார்ந்தவர்கள் நாங்கள். இன்றைக்கும் அந்தப் போராட்டம் பல்வேறு வகைகளிலும் தொடர்ச்சியாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.

ஏற்கெனவே நீர்வளம் குறைவான எமது தீவகப் பிரதேசத்தில் இன்று அதிகாரத் தரப்பினரது அனுசரணையுடன் சட்டவிரோத மண் அகழ்வு, மரம் தறிப்பு என்பன தாராளமாக இடம்பெற்று வருகின்றன. இது கடலரிப்பு, கடல்நீர் ஊருக்குள் வருதல் முதலான பல அழிவுகளுக்கு காரணமாக அமைந்து வருகின்றது.

இங்குள்ள மாணவர்கள் தம் கண்முன்னே அழிக்கப்படும் இயற்கை வளங்களை காக்கும் பணியில் ஒன்றுபட்டு உழைக்க முன்வர வேண்டும் என நான் அழைப்பு விடுக்க விரும்புகின்றேன். எந்தவொரு சமுதாய மாற்றத்துக்கும் மாணவர் சக்திதான் மிகப்பெரிய தூணாக இருந்திருக்கிறது. இன்றைக்கு இந்த மண்ணில் நாங்கள் நாட்டியிருக்கும் இந்த விதை நாளை மிகப்பெரும் விருட்சமாக வடமாகாணம் முழுவதும் விரிவடைந்து தொடர்ச்சியான ஒரு செயல்திறன் மிக்க ஒரு இயக்கமாக இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் ஒரு உறுதிப்பாட்டோடு எமது அமைச்சர் சூழலியலாளர் பொன்னுத்துரை ஐங்கரநேசனின் தலைமையின் கீழ் முன் சென்றிடவேண்டும் என இச்சந்தர்ப்பத்திலே கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்’ என்றார்.

இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், வேலணை பிரதேசசபைத் தலைவர் சி.சிவராசா, யாழ். பல்கலைக்கழக விவசாயபீட பேராசிரியர் கு.மிகுந்தன், மத்திய சுற்றாடல் அதிகாரசபை உதவிப் பணிப்பாளர் திருமதி வி.சத்தியகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி

தீவகக் கல்வி வலய மாணவர்களுக்கு கண்டற்காட்டில் வெளிக்களப்பயிற்சி

Related Posts