பல நவீன வசதிகளைக் கொண்டமைந்ததாக கலாசார மண்டபம் அமைக்கப்படவுள்ளது – அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் பல நவீன வசதிகளைக் கொண்டமைந்த கலாசார மண்டபத்துக்கான அடிக்கல் அடுத்த மாத இறுதிக்குள் நாட்டப்பட்டு கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

p10

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டப கே.சி நித்தியானந்தா அரங்கில் நேற்றய தினம் (02) இடம்பெற்ற பனை ஆராய்ச்சி மாநாடு 2014 நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பனை அபிவிருத்தி சபையின் கீழான பனை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஊடாக பனை வளத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவதே எமது அமைச்சின் நோக்கமாகும்.

அதன்பிரகாரம் பனைவளத்தை நம்பியிருக்கின்ற மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற வகையில் நாம் அரசின் கொள்கைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்தவகையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களுக்கும் நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

இணக்க அரசியலுக்கு ஊடாகவும் அரசுக்கும் எனக்குமுள்ள புரிந்துணர்வுக் கூடாகவும் நாம் பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் எதிர்காலத்திலும் முன்னெடுக்கவுள்ளோம்.

2010 ம் ஆண்டு யூன் மாதம் ஜனாதிபதி அவர்களுடன் நான் இந்தியாவிற்குச் சென்றிருந்த வேளை, 3000 கோடி ரூபா பெறுமதியான 50 ஆயிரம் வீடுகளை என்னுடைய முயற்சியின் பயனாகவே கிடைக்கப் பெற்றதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள், 35 கோடி ரூபாய் பெறுமதியில் குருநகர் வடகடல் நிறுவனத்திற்கு இயந்திர உபகரணங்களும் மூலப்பொருட்களும் கிடைக்கப்பெற்றதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை உட்கட்டுமானப் பணிகளுக்கென 50 கோடி ரூபாவும், பனை அபிவிருத்தி சபையின் கைதடியிலுள்ள பனை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 15 கோடி ரூபா இயந்திர உபகரணங்களும் தளபாடங்களும் கிடைக்கப் பெற்றதாகவும் வடமாகாண புகையிரத சேவை பாதைக்காக 10 ஆயிரம் கோடி ரூபாவை இந்திய அரசு வழங்கியுள்ளதையும் இதன்போது தெரிவித்தார்.

பனை அபிவிருத்தி சபையின் ஊடாக மக்களது வாழ்வாதாரத்தையும் உயர்த்துவதில் முன்னின்று உழைத்த அமரர் கே.சி நித்தியானந்தா அவர்கள் அச்சபையின் முன்னேற்றத்துக்காக அரும்பாடுபட்டு உழைத்தவர் என்றும் அவரது காலத்தில் அச்சபையில் தாம் ஊழியராக இருந்ததையும் நினைவு கூர்ந்த அமைச்சர் அவர்கள் தற்போது சபைக்காகவும் மக்களுக்காகவும் உழைத்து வரும் பசுபதி சீவரத்தினம் இருவரும் மக்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் முன்னின்று உழைத்தவர்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்திய துணைத் தூதரகத்தின் பிரதம செயலாளர் ஜஸ்ரின் மோகன், மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஆகியோர் உரையாற்றினர்.

தொடர்ந்து பனைசார்ந்த உணவு மற்றும் உணவல்லாத உற்பத்திகளது ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

நிகழ்வில் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்த ஆராய்ச்சியாளர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்ட அதேவேளை இம் மாநாட்டை சிறப்புற ஏற்பாடு செய்த பனை ஆராய்ச்சி நிறுவன முகாமையாளர் சிறி விஜேந்திரனுக்கு அமைச்சர் அவர்கள் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

இதனிடையே பனை அபிவிருத்தி சபையில் சமயாசமய ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக பனை அபிவிருத்தி சபையின் கீழான பனை ஆராய்ச்சி நிறுவனத்தினால் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் விசேட அம்சமாக பனை அபிவிருத்தி சபையின் முதலாவது தலைவர் கே.சி நித்தியானந்தா அவர்களது உருவப்படத்திற்கு அமைச்சர் அவர்கள் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.

பனை வள ஆராய்ச்சி ஊடாக பனைவளம் சார்ந்த கைத்தொழில்களை அபிவிருத்தி செய்தல் என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் பனை அபிவிருத்தி சபையின் பொதுமுகாமையாளர் லோகநாதன், வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை, அமைச்சரின் ஆலோசகர் சுந்தரம் டிவகலால மற்றும் துறைசார்ந்த பேராசிரியர்கள் கல்வியலாளர்கள் தொழிற்துறைசார்ந்தோர் நலன்விரும்பிகள் பாடசாலை சமூகத்தினர் பொதுமக்கள் என பெருந்திரளானனோர் கலந்து கொண்டனர்.

Related Posts