யாழ்.மாநகர சபையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்க முற்பட்ட வேளை, மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா அதற்கு இடமளிக்காமல் தடை விதித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாது சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
யாழ்.மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத் தொடர் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இன்று வியாழக்கிழமை (29) மாநகர சபை கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.
கூட்டம் ஆரம்பித்த வேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தாங்கள் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் போவதாகக்கூறி எழுந்த போது, அதனை முதல்வர் மறுத்தார்.
அவ்வாறு அஞ்சலி செலுத்துவதாயின் மறைந்த அல்பிரேட் துரையப்பா முதல் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனால் அதிருப்பதியடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
இருந்தும், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களுக்கான அஞ்சலி செலுத்தப் போவதாக த.தே.கூ தெரிவித்தனர். எனினும் அதனை மறுத்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் குழப்பமிட்டமையினால் சபையிலிருந்து த.தே.கூ உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற போது, இந்தியாவின் 15 ஆவது பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர தாமோரதாஸ் மோடிக்கு முதல்வர் உள்ளிட்ட ஆளுங்கட்சியினர் எழுந்து நின்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.