யாழ்.மாவட்டத்தில் இராணுவத்துக்கு ஆள்சேர்ப்புக் களமாக பிரதேச செயலகங்களையும், கிராம சேவையாளர்களையும் பயன்படுத்தும் வேலைத்திட்டத்தை இராணுவத்தினர் நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர்.
யாழ்.மாவட்டத்தின் சகல பிரதேச செயலகங்களுக்கும் நேரடியாகச் சென்று இராணுவத்தினர் இந்த நடவடிக்கைகளைத் தொடக்கியுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின் தொண்டர் படையணிக்கு ஆள்சேர்க்கும் நடவடிக்கையில் கடந்த சில மாதங்களாக இராணுவத்தினர் முழு மூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆயினும் யாழ்.மாவட்ட இளைஞர் யுவதிகள் பெருமளவு ஆர்வம் காட்டவில்லை. இவ்வாறானதொரு நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தினருக்கும் பிரதேச செயலாளர்களும் இடையிலான கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கலந்துரையாடலில் இராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு மேற்கொள்வது தொடர்பில் இராணுவத்தின் மேஜர் ஜெனரல் தர அதிகாரி ஒருவர் கலந்து கொண்டு பிரதேச செயலாளர்களுக்கு விளக்கமளித்திருந்தார். அத்துடன் இராணுவத்தின் தொண்டர் படையணிக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட ஒரு சிலரும் அழைத்து வரப்பட்டு அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் பிரதேச செயலாளர்களை, இராணுவ ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் நோக்குடன் பிரதேச செயலகம் தோறும் கலந்துரையாடல் ஏற்பாடு செய்து தருமாறு இராணுவத்தினர் கோரியிருந்தனர்.
இதற்கமைய இராணுவத்தினரின் கலந்துரையாடல் சகல பிரதேச செயலகங்களிலும் நேற்றுக் காலை 10 மணிக்கு இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கெடுத்திருந்தனர்.
இராணுவத்தினர் தாம் கொண்டு வந்த பல்லூடக வைப்பினூடாக (புறொஜெக்ரர்) இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு நடவடிக்கைகளை விளங்கப்படுத்தினர். அத்துடன் இந்த நடவடிக்கையை விரிவுபடுத்தும் நோக்கில் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவு ரீதியாகவும் இந்த பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதன் பின்னர் பிரதேச செயலகங்களில் இதற்குரிய நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. அரச அதிகாரிகளைக் கொண்டு இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கைகள் தொடர்பில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கேள்வியயழுப்பிய போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இருவரும் அதனை மழுப்பியிருந்தனர்
என்பதுவும் குறிப்பிடத்தக்கது