ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்தியாவின் புதிய பிரதமராக நியமனம் பெற்றுள்ள நரேந்திர மோடி அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இன்று (26) முற்பகல் புதுடில்லியை சென்றடைந்தார்.
புதுடில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் சனாதிபதியை இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசம், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சிங்ஹ ஆகியோர் வரவேற்றனர்.
பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்ளும்படி மோடி அவர்கள் கடந்த வாரம் விடுத்த அழைப்பை ஜனாதிபதி ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டார். பாக்கிஸ்தான் பிரதம அமைச்சர் நவாஸ் செரிப், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமிட் கர்சாய், பூட்டான் பிரதமர் ஷெரின் டொப்கே,நேப்பாள பிரதமர் சுசில் கொய்ரால, மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கையும் ஆகியோர் உள்ளிட்ட அரச தலைவர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.
இன்று மாலை ராஸ்ரபதி பவனில் நடைபெறும் பதவியேற்பு வைபவத்தின் பின்னர், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்கள் இராப்போசண விருந்துபசாரம் ஒன்றை அளிப்பார்.
ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் புதுடில்லியில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் மோடி அவர்களுடனும் இன்னும் அரச தலைவர்கள் சிலருடனும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கால்நடைவளர்ப்பு கிராமிய சன சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன ஆகியோருடன் யாழ்ப்பாண மாநகர சபையின் நகர சபைத் தலைவி திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி ஷெனுக்கா செனவிரத்ன ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.