யாழில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் கடந்த 60 நாட்களுக்கு மேலாக மேற்கொண்டு வரும் வெளிக்களப் பணிப்பகிஷ்கரிப்பினை முடிவுக்குக் கொண்டு வர வடமாகாண சபையில் அவைத்தலைவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத் தொடர் வியாழக்கிழமை (22) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.
இதன்போது சுமார் 2 மணித்தியாலங்களுக்கு மேல் சுகாதார வைத்தியதிகாரி பணிமனையில் பணியாற்றிவரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் வெளிக்கள உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்புத் தொடர்பாக கடுமையான விவாதங்கள் இடம்பெற்றன.
இவ்விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கூறுகையில்,
‘பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் வெளிக்களப் பணிப்புறக்கணிப்பு விடயம் தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா ஆகியோர் கலந்துரையாடல்களை மேற்கொண்டும் அது பயனளிக்கவில்லை.
பிரதேச சபைகளின் கீழுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை மீண்டும் பிரதேச சபைகளின் கீழ் பணியாற்ற அனுமதிக்கும்படி கோரியே வெளிக்க உத்தியோகத்தர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதேச சபைகளின் கீழ் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் பணியாற்றுவதற்கு காடர் இல்லாமல் இருக்கின்றது.
இருந்தும் அதன் கீழ் காடர் (வேலை செய்வதற்கான அனுமதி) உருவாக்குதவற்கான நடவடிக்கைகள் முதலமைச்சரின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மக்களின் நலனினைக் கருத்திற்கொண்டு தங்கள் போராட்டத்தினைக் கைவிடக்கோரி கடிதங்கள் அனுப்பியபோதும், அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். எங்கள் உறுதிமொழிகளை அவர்கள் செவிசாய்க்கவில்லை.
போர்க்காலச் சூழலில் சுகாதார வைத்தியதிகாரிகளுக்கும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு நெருக்கமான உறவு இருந்ததுடன், அவர்கள் இணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது கருத்துக்கூறிய அவைத்தலைவர், இந்தப் பிரச்சினை தொடர்பில் எங்களை (வடமாகாண சபையினை) பகடைக்காய்களாகப் பயன்படுத்தப் பார்க்கின்றார்கள். சமரசத்தின் மூலம் தீர்க்கப்படவேண்டிய மேற்படி விடயம் மத்திய அரசிற்கு கயிறு கொடுக்கும் விடயமாக மாறிவருகின்றது.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் வெளிக்களப் பணிப்புறக்கணிப்பினால் சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் பெருமளவான சுகாதாரச் சீர்கேடுகள் இடம்பெறுகின்றன.
இந்த விடயத்தினை உடனே முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு 10 பேர் கொண்ட குழு எனது தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழு விரைவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சுகாதார வைத்தியதிகாரிகள் மற்றும் பிரதேச சபைத் தவிசாளர்களுடன் கலந்துரையாடி இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும’ என்று தெரிவித்தார். இந்தப் பிரச்சினையினை அரசியலாக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த விடயம் தொடர்பாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா, உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் ஆதரவான கருத்துக்களை முன்வைத்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் நல்லூர், உடுவில், சங்கானை மற்றும் தெல்லிப்பளை ஆகிய பிரதேச சபைகளிலே இவ்வாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கடமையாற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலே இந்த சுகாதாரப் பணிமனையில் கடமையாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் வெளிக்களப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரிக்கும் பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் பின்னர், பிரதேச சபைகளின் கீழுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை சுகாதார வைத்தியதிகாரி பணிமனையின் கீழ் மாற்றும்படி சுகாதார வைத்தியதிகாரிகள் போராட்டங்களை மேற்கொண்டு, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி குறித்த பிரதேச சபை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் மாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.