யாழ். மாநகரசபை சுகாதார ஊழியர்களின் நிரந்தர நியமனம் அவர்கள் பணியாற்றி காலத்திற்கேற்ப முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார்.
யாழ். மாநகரசபையின் கீழ் சுகாதார ஊழியர்களாக நீண்டகாலம் பணிபுரிந்து இதுவரைகாலமும் நிரந்தர நியமனம் கிடைக்காது. புறக்கணிக்கப்பட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பான சந்திப்பொன்று யாழ். மாவட்ட ஈ.பி.டி.பி கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துக்கூறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
‘சுகாதார ஊழியர்களது தெரிவுகள் யாவும் எதிர்காலத்தில் அவர்கள் வேலை செய்த வருடங்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான தரவுகள் யாவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தற்போது உங்களால் வழங்கப்பட்டுள்ள தரவுகள் தான் இறுதியானதாக கொள்ளப்படும். வரும் வாரத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவை சந்திப்பதற்கு உங்களுக்கு ஏற்பாடு செய்து தரப்படும். உங்களது நிலைமைகளைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கையை நாம் செய்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படாத 40 சுகாதார ஊழியர்கள் கலந்துகொண்டனர். சுகாதார தொழிலாளர்கள் 56 பேருக்கும் விரைவில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.