நேற்றுமுன்தினம் ஊடகங்களில் வெளியாகிய ஒளிப்படங்களில் இறுதிப்போரில் இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகமான தமிழீழ தேசிய தொலைக் காட்சியின் பணியாளர் இசைப்பிரியாவுக்கு அருகில் இருப்பவர் மல்லாவியைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவரது பெற்றோர் நேற்று உறுதிப்படுத்தினர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்ததாவது “”எமது மகள் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். இறுதிப்போரில் நாம் முள்ளிவாய்க்காலை எட்டியிருந்தோம். அப்போது எமது மகள் உஷாளினி 2009 மே மாதம் முற்பகுதியில் காணாமற்போயிருந்தார். மீள்குடியேற்றத்தின் பின்னர் மகள் காணாமைபோனமை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்திருந்தோம்.
அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற காணாமற்போனோரை கண்டறியும் விசாரணை ஆணைக்குழுவிலும் சாட்சிகளை பதிவு செய்திந்தோம். மகள் உயிருடன் இருக்கிறார் என எம்மை ஏமாற்றி மல்லாவியைச் சேர்ந்த ஒருவர் எம்மிடமிருந்து ஒரு லட்சம் வரையான பணத்தையும் பெற்றிருந்தார். இது குறித்து பின்னர் இராணுவத்தினருக்கும் நாம் தெரியப்படுத்தியிருந்தோம்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பத்திரிகைகளில் வெளியாகிய புகைப்படத்தில் இசைப்பிரியா என்பவருக்கு அருகில் எமது மகள் இருப்பதை நாம் அடையாளம் கண்டுள்ளோம். இது குறித்து நாளை (இன்று) சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் முறைப்பாடு செய்யவுள்ளோம்” என்று உஷாளினியின் தந்தை குணலிங்கம் தெரிவித்தார்.