Ad Widget

மோடிக்கு கூட்டமைப்பு வாழ்த்து!

modiஇந்தியப் பொதுத் தேர்தலில் பெருவெற்றியீட்டியுள்ள பாரதீய ஜனதாக் கட்சிக்கும் அதன் வெற்றியின் அடிப்படையில் புதிய பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்திருக்கின்றது.

பாரதீய ஜனதாக்கட்சியின் வெற்றி தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

இந்தியப் பொதுத்தேர்தல் முடிவுகளை எமது மக்கள் பெரும் எதிர்பார்ப்போடு பாத்திருந்தார்கள். இத்தேர்தலில் பாரதீய ஜனதாக்கட்சி பெரு வெற்றியீட்டியிருக்கின்றது.

இந்த வெற்றித்திருப்புமுனை ஈழத்தமிழர்களின் வாழ்வியலிலும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தாதா என்று எமது மக்கள் பார்த்திருக்கின்றனர். புதிதாகப் பதவியேற்கும் பாரதீய ஜனதாக்கட்சி, இதுவரை தீர்க்கப்படாத இலங்கைத் தமிழரின் பிரச்சினை குறித்து, சிரத்தையும், அக்கறையும் கொண்டு செயற்படும் என்றும் முழுமையாக நம்புகிறோம்.

புதிய இந்திய அரசு பதவியேற்றதும் அதனுடன் தொடர்பாடல் கொள்வதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முயற்சி எடுக்கும். புதிய அரசுத் தலைவர்களுடன் நாம் பேசுவோம். நீண்டகாலம் தீர்க்கப்படாமல் இருக்கும் எமது மக்களின் தேசிய இனப்பிரச்சினையின் பரிமாணங்கள் குறித்து புதிய தலைமைக்கு விளங்கப்படுத்துவோம்.

இவ்விடயத்தில் இந்தியா அர்த்தமுள்ள வகையில் தலையிட்டுத் தீர்ப்பதற்கான முன்முயற்சிகளை எடுப்பதற்கு புதிய தலைமையுடன் விரிவான கலந்துரையாடலில் நாம் ஈடுபடுவோம். இந்தத் தேர்தல் முடிவை நம்பிக்கை தரும் விடயமாக எமது மக்கள் நோக்குகின்றனர் – என்றார் மாவை அவர்.

இதேவேளை முதலமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் —

உங்கள் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி கண்டிருக்கும் இந்த மகத்தான தேர்தல் வெற்றி, இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு சாதனை எனலாம்.

பலம்பொருந்திய ஓர் அரசாங்கத்தை அமைக்கப்போகும் நீங்கள் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றினைக் காண்பதற்கான உத்வேகத்தை ஏற்படுத்தக்கூடிய பயனுறுதியுடைய பங்களிப்பை வழங்குவீர்கள் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

இலங்கைத் தமிழ் மக்களுக்கு நீதி கிட்ட உங்கள் தலைமையிலான அரசாங்கம் ஆரோக்கியமான கொள்கை அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என நான் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றேன்.” – இவ்வாறு தனது வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts