ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெசாக் பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கம்
புத்தபெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல் மற்றும் பரிநிருவானநிலை அடைதல் என்ற மூன்று முக்கிய நிகழ்வுகளைக் குறித்து நிற்கும் வெசாக் பண்டிகையை நாம் பூரண அரச அனுரணையுடன் மிகுந்த பக்தியுணர்வுடன் கொண்டாடுகிறோம்.
வெசாக் பண்டிகை இலங்கையிலும் உலகெங்கிலுமுள்ள பௌத்த மக்களின் மிகவும்
புண்ணியம்வாய்ந்த ஒரு பண்டிகையாகும். பல நூற்றாண்டுகளாக மிகுந்த தியாகத்துடன் பௌத்த சமயத்தின் தூயவடிவமான தேரவாதத்தைப் பாதுகாத்த நாம் புத்தரின் பிரசன்னம் எங்கும் பரவியிருக்கும் மகிழ்ச்சியுணர்வுடன் இப்பண்டிகையைக் கொண்டாடுகிறோம்.
புத்தரின் போதனைகள் உலகிற்கு மிகப்பெரும் சமாதானச் செய்தியாகும். வெறுப்பும்
குரோதமும் கவலைக்கான காரணி என்பதையும் அன்பும் கருணையும் மனநிறைவுக்கான வழி என்பதையும் புத்தசமயம் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது. இனம், மதம், குலம் மற்றும் கோத்திரம் என்பவற்றின் அடிப்படையிலான எல்லாப்பிரிவுகளும் அர்த்தமற்றவை என்றும் ஒரு மனிதனின் அந்தஸ்து அவனது நல்ல அல்லது தீய நடத்தையின் மூலமே அளவிடப்படுகிறது என்றும் அது குறிப்பிடுகிறது.
வாழ்வாதாரங்கள் புத்தரின் போதனைகளின் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு பண்பாடான சமூகம் என்றவகையில் நாம் உலக நாடுகளுக்கு மத்தியில் தலைநிமிர்ந்து நிற்கின்றோம்.
ந அத்தஹேது ந பரஸ்ஸ ஹேது – ந புத்தமிச்சே த தனங் ந ரட்டங்
ந இச்செய்ய அதம்மேன ஸமித்திமத்தனோ – ஸஸீலவா பஞ்ஞவா தம்மிகோ ஸியா
(தனக்காகவும் பிறருக்காகவும் மக்கட் பேற்றையும் அரசாட்சியையும் விரும்பக்கூடாது. முறை தவறிய வழியில் தனது சொந்த நன்மையை நாடக்கூடாது. அத்தகையவனே அறிவும் அறமும் உடையவன் ஆவான்.) என புத்தர் குறிப்பிடுகிறார்.
புத்தரின் போதனைகளால் வளம் பெற்றுள்ள ஒரு சமூகத்தில், எமது எதிர்பார்ப்புகள்
தம்மபதவில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த வசனங்களுக்கு ஏற்ப சிறந்த போதனைகளை
கௌரவிப்பதன் அடிப்படையில் அமைந்தவையாகும். எனவே நாம் ஏனையவர்களின்
சுதந்திரத்தையும் கௌரவத்தையும் அரசாங்கக் கொள்கைகளிலேயே உறுதியாகப்
பாதுகாத்துள்ளோம்.
புத்தரின் போதனைகளுக்கேற்ப தமது வாழ்வியலைக் கடைப்பிடிப்பவர்கள் என்றவகையில் நன்மையை அடைந்துகொள்வதில் மிகுந்த உறுதியோடு ஒருநாள் வாழ்வது அது இல்லாமல் நூறு வருடங்கள் வாழ்வதைவிட பெறுமதியானது என்பது எமது புரிதலாகும்.
எனவே இந்த வெசாக்காலத்தில் இந்த உலகிற்கும் அதற்குப் பின்னரும் அபரிமிதமான
நன்மைகளைச் சேர்த்துக்கொள்வதற்கு தாமதமின்றி முயற்சிப்போம்.
என்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்