நாட்டில் நிலவிய பயங்கரவாதம், வடக்கு கிழக்கு இளைஞர், யுவதிகளின் உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்டது. நாம் அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்துள்ளோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடான கேள்விகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது பதிலளித்து வருகின்றார்.
இதன்போது, ‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளின் குறிப்பான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உங்களது அரசாங்கத்தின் கொள்கைகள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன?’ என்று ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் பொதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இக்கேள்விக்கு தொடர்ந்தும் பதிலளித்த ஜனாதிபதி, ‘கடந்த 2013ஆம் ஆண்டில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் வடக்கிலிருந்து சிறந்த பெறுபேறுகள் கிடைத்தன. இதுவே, நாம் அவர்களுக்காக முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு கிடைத்த சிறந்த பெறுபேறாகும்’ என்றார்.
அத்துடன், ‘வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்காக தகவல் தொழில்நுட்ப கூடம் உள்ளிட்ட தெற்குப் பாடசாலைகளில் காணப்படும் சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன’ என்றும் ஜனாதிபதி தனது பதிலைப் பதிவு செய்துள்ளார்.