பாதுகாப்புத் துறையுடன் தொடர்புபடாத ஒருவரே வடக்கு மாகாண சபையின் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். இதனையே ஆரம்பம் முதல் நாம் வலியுறுத்தி வருகின்றோம் என்று தெரிவித்துள்ளார் அந்தக் கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.
தற்போது வடக்கு மாகாண ஆளுநராக முன்னாள் யாழ். மாவட்டத் இராணுவ தளபதியான மேஜர் ஜெனரல் சந்திரசிறி பதவி வகிக்கின்றார். அவரது பதவிக் காலம் அடுத்த மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. அதன் பின்னர் அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்படாது என்று வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ள நிலையில், புதிதாக ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.
இந்தநிலையில் வடக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநராகப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கா நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று வினவிய போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,”பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்கள் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படக் கூடாது என்பதை நாம் பல தடவைகள் வலியுறுத்தி கூறியிருக்கின்றோம். எமது தற்போதைய நிலைப்பாடும் அதுதான். பொலிஸ் துறை சிவில் நிர்வாகத்துடன் தொடர்புடைய ஒன்றுதான். ஆனால் நாம் கேட்பது பாதுகாப்புத் துறையுடன் தொடர்புபடாத சிவிலியன் ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான்.
அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி முன்வர வேண்டும்’ என்று தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராகிறார் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ?