ஆளும் தரப்பினர் சிலரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இன்றைய யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் இவ்வாறு செயற்படுவதை உடனடியாக நிறுத்தி கபட நாடகத்தை மாணவர்களிடையே அரங்கேற்றாமல் அவர்களின் கல்வி சுதந்திரத்திலும், இளைஞர்களின் சுதந்திரத்தை கலைக்காமல் மாணவர்களின் எல்லாவிதமான நலன்களையும் கருத்தில் கொண்டு உடனடியாக அறிக்கவிக்கப்பட்ட விடுமுறையை இடைநிறுத்துவதோடு தமிழ் அல்லாத மாணவர்களிடையே பிரதேசவாதத்தையும் இன வாதத்தையும் கொண்டு வர வேண்டாம் என முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எஸ்.விஜயகாந், கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவையாவன…
யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் எந்த ஒரு காரணத்தையும் உத்தியோக பூர்வமாக மாணவர்களுக்கு தெரியப்படுத்தாமல் பல்கலைக்கழக செயற்பாடுகளை முடக்கி, மாணவர்களுக்கு விடுமுறையை வழங்கியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கையில் சர்வதேச இளைஞர் மாநாடு தொடங்கி, நடைபெற்று வருகின்றது. இதில் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் இளைஞர்கள் கலந்து கொண்டு- இளைஞர்களின் கல்விச் சுதந்திரம், பேச்சுத் சுதந்திரம், தொழில் சுதந்திரம், கருத்து சுதந்திரம் என ஏராளமான சுதந்திரங்களை பற்றி பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் யாழ். பல்கலைகழக மாணவர்களுக்கு மட்டும் இந்த சுதந்திரங்கள் எதுவும் கிடைக்கக் கூடாது என திட்டமிட்டு அவர்களை இந்நாட்டிற்கு எதிரானவர்கள் என காட்டி அவர்களின் வாழ்க்கையை இன்றைய பல்கலைக்கழக நிர்வாகம் கேள்விக்குறியாக்கியிருக்கின்றது.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட போரின் தம் உயிரை தியாகம் செய்தவர்களுக்காகவே ஐந்தாம் மாதம் பதினெட்டம் திகதியை உள்ளடக்கி இவ்விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சமூகம் பேசுகின்றது. இது தமிழ் தேசிய மக்களின் உணர்வு பூர்வமான நிகழ்வாக இருப்பினும் இதை சிலர் ‘பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது’ போன்று செயற்படுவது தமிழ் தேசியம் என்று மட்டும் சொல்லிக்கொண்டிராமல் அதை நேசிக்கின்ற எமக்கு கடும் விசனத்தை உருவாக்கியுள்ளது. இதை யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் எம் தமிழ் சமூகமும் புத்தியீவிகளும் உணராமல் போனமையும் எமக்கு மிகுந்த கவலையளிக்கின்றது.
மனம் சம்மந்தப்பட்ட உணர்வு சம்மந்தப்பட்ட இந்த நிகழ்வினை தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற ஒவ்வொரு தமிழனும் உள்ளார்ந்த ரீதியில் அனுஷ்டிக்க வேண்டும் என்பதே எமது கருத்தாகும். தமிழ் பேசிக்கொண்டு அரசுடன் சேர்ந்தும் சேராமலும் இயங்கிக் கொண்டிருக்கின்ற அரசியல்வாதிகள், யாழ். பல்கலைக்கழக மாணவர்களை கேடயமாக பயன்படுத்தி ஏனைய பல்கலைக்கழகங்களில் நின்றும் யாழ். பல்கலைக்கழகத்தை வேறுபடுத்தி எம் மாணவர்களையும் இளைஞர்களையும் இந்த நாட்டுக்கு எதிரானவர்களாய் காட்டி அவர்களின் சுதந்திரத்தை பறித்து வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியும் கேள்விக்குறியாக்கவும் முனைகின்றர்கள். ஆகவே ஆளும் தரப்பினர் சிலரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இன்றைய யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் இவ்வாறு செயற்படுவதை உடனடியாக நிறுத்தி கபட நாடகத்தை மாணவர்களிடையே அரங்கேற்றாமல் அவர்களின் கல்வி சுதந்திரத்திலும், இளைஞர்களின் சுதந்திரத்தை கலைக்காமல் மாணவர்களின் எல்லாவிதமான நலன்களையும் கருத்தில் கொண்டு உடனடியாக அறிக்கவிக்கப்பட்ட விடுமுறையை இடைநிறுத்த வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கின்றோம். தமிழ் அல்லாத மாணவர்களிடையே பிரதேசவாதத்தையும் இன வாதத்தையும் கொண்டு வர வேண்டாம் என்றும் நாம் வேண்டி நிற்கின்றோம்.