15வது உலக இளைஞர் மகாநாட்டின் ஆரம்ப விழாவில் கலந்துகொள்வதற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகளின் பேரவை தலைவர் கலாநிதி ஜோன் டபிள்யு. ஏஷ் (Dr. John W. Ashe) அவர்கள் நேற்று முற்பகல் அலரி மாளிகையில் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.
இலங்கை அண்மைக்காலத்தில் அடைந்துள்ள முன்னேற்றத்தை சனாதிபதியுடன் கலந்துரையாடியபோது அவர் பாராட்டினார்.
நாட்டில் இடம்பெற்றுள்ள அபிவிருத்தியை நாங்கள் கண்டோம் என பேரவை தலைவர் கூறினார்.
சனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினம் அம்பாந்தோட்டையில் உலக இளைஞர் மகாநாட்டை ஆரம்பித்து ஆற்றிய உரையை அவர் பாராட்டினார்.
சுமார் முப்பது ஆண்டுகள் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கை முரண்பாடுகள் முடிவடைந்ததன் பின்னர் அடைந்துள்ள முன்னேற்றத்தைப்பற்றி தெளிவுப்படுத்திய சனாதிபதி அவர்கள், இப்பொழுது நாட்டின் சராசரி வருடாந்த வளர்ச்சி வீதம் 7% என சுட்டிக்காட்டினார். வட மாகாணத்தில் அது 22% ஆகும். இலங்கை சீனாவுக்கு பின்னர் ஆசியாவில் உயர் வளர்ச்சி அடைந்த நாடுகள்
சிலவற்றில் ஒன்றாகும் என சனாதிபதி கூறினார்.
பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்ததன் பின்னர் சுமார் 12,000 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். சிறுவர் போராளிகள் அனைவரும் அவர்களுடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலைகள், புகையிரதப் பாதைகள், நீர்ப்பாசனம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் பாரியளவில் அபிவிருத்தி செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரம். கல்வி ஆகிய துறைகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன எனவும் சனாதிபதி குறிப்பிட்டார்.
தற்பொழுது ஆகக்கூடிய மாணவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து உயர் கல்விக்கான வாய்ப்புகளை பெற்றிருக்கின்றனர் என சனாதிபதி தெரிவித்தார்.
2005ஆம் ஆண்டின் சனத்தொகையில் 3% மாக இருந்த கணனி எழுத்தறிவு தற்போது 50% வரை அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
இந்நாட்டின் மீது மேற்கொள்ளப்படுகின்ற புறத்தாக்கங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதை சனாதிபதி சுட்டிக்காட்டினார். மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது இலங்கை நலனோம்பல் சமூகமாகும் என்று கூறினார்.
கலாநிதி ஏஷ் அவர்களுடன் வருகை தந்த தூதுக்குழு அங்கத்தினர்கள் இலங்கையின் சமூக வாழ்வில் பெண்களுடைய பங்கேற்பைப்பற்றி கேட்டபோது, கல்வி, சுகாதாரம்,வங்கி சேவை உள்ளிட்ட பல துறைகளில் பெண்களுடைய பங்கேற்பு 60 வீதம் அல்லது அதற்கு மேல் இருக்கின்றது என சனாதிபதி தெரிவித்தார். அரசியலில் மட்டும் இன்னும் அந்நிலையை காண முடியவில்லை என அவர் கூறினார்.
ஐக்கிய நாடுகளின் பேரவை தலைவருடைய பணியாட்றொகுதி தலைவர் தூதர் பொலட் பெத்தல் (Paulette Bethel) அவர்கள் உள்ளிட்ட சிலர் கலாநிதி ஜோன் ஏஷ் அவர்களுடன் வருகை தந்திருந்தனர். பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, சனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி கலாநிதி பாலித்த கொஹன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி.ஷெனுக்கா செனிவிரத்ன ஆகியோரும் இக்கலந்துரையாடலில்
கலந்துகொண்டனர்.