வயோதிபர் ஒருவரின் துணிச்சலான நடவடிக்கையினால் சங்கிலித் திருடர்கள் இருவர் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம் யாழ்.அரியாலை பகுதியில் நேற்று இடம்பெற்றதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
பிடிபட்டவர்கள் இருவரும் புதுக்குடியிருப்பு, கைவேலிப் பகுதியினைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய சகோதரர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
அரியாலை, ஆசீர்வாதப்பர் வீதியிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்ற பெண்ணின் சங்கிலியை மோட்டார் சைக்களில் வந்த இரு இளைஞர்கள் அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
சங்கிலியை பறிகொடுத்த பெண் கூச்சலிட்டதும், வீதியோரத்தில் கதிரையில் அமர்ந்திருந்த வயோதிபர் ஒருவர், பெண் கூக்குரல் இடுவதினையும் மோட்டார் சைக்கிள் வேகமாகச் செல்வதினையும் அவதானித்து, மோட்டார் சைக்கிள் மீது தான் அமர்ந்திருந்த கதிரையினை தூக்கி எறிந்துள்ளார்.
இதனால் நிலை தடுமாறிய திருடர்கள் கீழே வீழ்ந்த போது, அப்பகுதியில் கூடிய பொதுமக்களினால் திருடர்களில் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட மற்றையவர் தப்பித்துச் சென்றுவிட்டார்.
தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் மேற்கொண்ட தேடுதலில் தப்பிச்சென்ற நபர் நாயன் மார்கட்டுப் பகுதியில் வைத்து பிடிக்கப்பட்டு இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குறித்த இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளினை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.