யாழ். மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவிற்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாட்டி வைத்தார்.
மாநகரசபை வளாகத்தில் மேற்படி கட்டிடத்திற்கான அடிக்கல் இன்றைய தினம் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாநகரசபை தீயணைப்புப் பிரிவிற்கென புதிய கட்டிடத்திற்காக நிதியுதவியினை உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சிடம் கோரியிருந்ததது.
இந்நிலையில், இரண்டு மாடிகளைக் கொண்டதாக 6.7 மில்லியன் ரூபா செலவில் அமையப் பெறவுள்ள இப் புதிய கட்டிடத்திற்காக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சு 5 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ள நிலையில் யாழ்.மாநகர சபை 1.7 மில்லியன் ரூபா ஊழியர் கொடுப்பனவாக வழங்கவுள்ளது.
யாழ்.மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவிற்கென ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்திலுள்ள இடப்பற்றாக்குறையினை அடுத்து வளாகத்தில் சகல வசதி, வாய்ப்புக்களை கொண்டதாக நவீன முறையில் புதிய கட்டிடம் அமையப் பெறவுள்ளது.
சிறப்புப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாட்டி வைத்தார்.
இதன்போது மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்களும் உடனிருந்தனர்.