“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே பலவித நாடகங்கள் நடந்தேறுகின்றன. அவற்றின் பின்னணியில் சுயநலமே பொதிந்து இருக்கின்றது. சுயநலத்திற்காக வேறு கட்சிகள் கூட ஒன்றிணைந்து செயற்பட முன்வருகின்றன. அதாவது எமது கட்சியினர் எம்மவரை வெளியேற்றப் பிற கட்சியினரை நாடுகின்றனர்” என்று தெரிவித்திருக்கின்றார் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்.
சாவகச்சேரியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே நாள் கூட்டத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது –
ஆக்கிரமிப்பு இராணுவம்
ஆக்கிரமிப்புப் படையாக இராணுவம் இங்கு இருக்க நாம் இடமளிக்கப் போவதில்லை. எமக்கு வேண்டாத இராணுவம் விரைவில் எம் மண்ணை விட்டு வெளியேற வேண்டும். அன்று “வெள்ளையனே! வெளியேறு” என்று உரக்கக் கூறிய எம் மக்களின் குரல் இனி இராணுவத்தினரும், அரசாங்கத்தினரும் கேட்கும் படியாக “படையினரே வெளியேறுங்கள்” என்று ஒலிக்கப் போகின்றது. சர்வதேச விதிகளுக்கு அமைய ஆங்காங்கே மத்திய அரசாங்கம் சார்பான அமைதிப் படைகளை நிலை நிறுத்த நாங்கள் இடமளிக்கலாம். ஆனால் தம் எண்ணத்திற்கு ஒர் ஆக்கிரமிப்புப் படையாக எமது நாட்டுப் படையினர் இங்கு இருக்கப் போவதை நாம் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் கூறினார். இராணுவத்தை ஒரு போதும் வடமாகாணத்தில் இருந்து எடுக்க மாட்டோம் என்று ஜனாதிபதி இறுமாப்பாகக் கூறியதாகப் பத்திரிகை வாயிலாக அறிந்தேன்.
முதலாவது, எமது ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இருப்பர் என்பது என்ன நிச்சயம்? அவரின் வாழ்க்கை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது இன்னொரு கேள்விக்குறி. அடுத்து, அவரின் எண்ணங்களைக் கொண்டவாறே இனி வரும் அரசாங்கத்தினரும் செயற்படுவர் என்பதற்கு உத்தரவாதம்? ஒரு காலத்தில் பிரபாகரனும் கேட்பார் இன்றிக் கோலோச்சினார். அதை ஜனாதிபதி அறியாதவர் அல்ல. அப்படியாயிருந்தும் இப்பேர்ப்பட்ட சவாலான கருத்துக்களை ஏன் அவர் முன் மொழிகின்றார் என்று எண்ணிப் பரிதாபப்பட்டேன் எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதியோ, இராணுவமோ தாம் நினைத்தவாறு எமது மண்ணில் நிரந்தரமாக அவர்கள் இருந்துவிட முடியாது. அதற்கு இயற்கை இடமளிக்காது. இறைத்தன்மை இடமளிக்காது.
ஏன் இந்தியப் பாதுகாப்புக் கரிசனைகள் கூட இடமளிக்கா. எமக்கு வேண்டாத இராணுவம் விரைவில் எம் மண்ணை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அவர் கூறினார்.
எனவே இந்த மே தின விழாவானது எமது அடிப்படை உரிமைகளைத் தட்டிக் கேட்க வழி சமைப்பதாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன். இராணுவத்தினர் எமது சகோதரர்கள். சிங்களச் சகோதரர்கள். ஆனால் அவர்களுக்கென்று வாழ இடமுண்டு. பயிர் செய்ய நிலமுண்டு. மீன் பிடிக்கக் கடல் உண்டு. காத்து நிற்கப் பெண்கள் உண்டு. இங்கிருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கும் இல்லை. அவர்களை எம் தோள் மேல் தூக்கிச் செல்ல எமக்குக் கடப்பாடு எதுவும் இல்லை. இதைப் புரிந்து அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும்.
உங்களுக்கு இந்த மேதினக் கூட்டத்தில் நான் எடுத்தியம்ப விரும்பும் முதலாவது கருத்து மேதின வெற்றியை ஊர்ஜிதப்படுத்திய அந்த 1886ம் ஆண்டைய தொழிலாளப் பெருமக்களின் வாழ்கையில் இருந்து, அவர்களின் அன்றைய நடத்தையில் இருந்து, ஒற்றுமையையும், ஐக்கியத்தையும், ஒத்துழைப்பையும் இலங்கையின் வட கிழக்குத் தமிழ்ப் பேசும் மக்களாகிய நாங்கள் இன்று மனதிற்கெடுத்துக் கொள்வோம்.
ஒற்றுமையின்மையே எமது தோல்விக்குக் காரணம்
தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் வாழ்க்கையை எடுத்துக் கொண்டோமானால் எமக்குள் ஒற்றுமையின்மையே எமது தோல்விக்குக் காரணம் என்பதை உணர்ந்து கொள்ளலாம். நாம் ஒவ்வொருவரும் ஒற்றுமை வேண்டும் என்று தான் கூறுகிறோம். ஆனால் எம்மால் ஒன்றுபட முடியாது இருக்கின்றது. இது ஏன் என்று பார்த்தோமானால் ஒவ்வொருவரும் மற்றவர்கள் தன்னுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றார்கள். அதாவது நான் கூறுவது தான் சரி, நான் எண்ணுவதுதான் சரி, நான் செய்வதுதான் சரி ஆகவே மற்றவர்கள் என்னுடன் இணைந்து நடக்க வேண்டும் என்றே நினைக்கின்றார்கள்.
எமது தமிழர்கள் மட்டும் ஒற்றுமைக்கு விதிவிலக்காக வாழ்கின்றார்கள். எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே பலவித நாடகங்கள் நடந்தேறுகின்றன. அவற்றின் பின்னணியில் சுயநலமே பொதிந்து இருப்பதை நாம் அவதானிக்கலாம். சுயநலத்திற்காக வெவ்வேறு கட்சிகள் கூட ஒன்றிணைந்து செயற்படவும் முன்வருகின்றன. அதாவது எமது கட்சியினர் எம்மவரை வெளியேற்றப் பிற கட்சியினரை நாடுகின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எமது வாழ்க்கை வளம் பெற வேண்டுமென்றால் வருங்காலம் நல்ல முறையில் அமைய வேண்டும் என்றால் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் நலன் கருதியே நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். எமது கடமைகள், கடப்பாடுகள், நடவடிக்கைகள் யாவும் அவர்களின் நலன் கருதியே ஆற்றுப்படுத்தப்பட வேண்டும். நாங்கள் பதவிக்கு வந்தால்த்தான் மக்களுக்கு நாங்கள் சேவை செய்யலாம் என்று எண்ணுவது மடமை. நீங்கள் எங்கே இருந்தாலும் கட்சிக்கும், மக்களுக்கும் நன்மைகள் செய்யலாம், சேவைகள் புரியலாம், பணிகளில் ஈடுபடலாம். ஐக்கியம், ஒற்றுமை ஆகியனவற்றை மே தினம் குறிக்கின்றது.
தமிழ் மக்கள் அந்த முக்கியமான ஒரு கருத்தை ஆழ் மனதுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி வைக்கின்றேன். இன்று எமது நடவடிக்கைகளை முன்னெடுக்கக் காலம் கனிந்து வந்து கொண்டிருக்கின்றது. ஜெனிவாத் தீர்மானமானது சகல உலகத்தையும் ஒரு சில காலத்திற்கு எம் மீது கரிசனை கொள்ள வைக்கும். அதற்கிடையில் இங்கு நடப்பவற்றை எல்லாம் நாங்கள் பட்டியலிட்டு வெளி உலகத்திற்கு எடுத்துக் காட்ட வேண்டியிருக்கின்றது. திருமலையில் கூடி இவை பற்றியெல்லாம் ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க எமது கட்சியினால் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
எம்மிடையே நடந்துள்ளதையும், நடப்பவற்றையும் நான்கு தலையங்கங்களின் கீழ் நாங்கள் அடையாளம் காணலாம்.
- 2009ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற அனர்த்தங்கள். இவை பற்றி ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஆராயவுள்ளது. ஆனால் அவர்கள் நடத்தும் விசாரணைகளுக்கு நாங்கள் எம்மாலான விபரங்களையும், தரவுகளையும், விளக்கங்களையும் கொடுக்க வேண்டும். அதைக் கொடுக்க அரசாங்கம் சகல விதங்களிலும் முட்டுக்கட்டையாக இருக்கும். அதையும் மீறி உரிய சத்தியப் பத்திரங்கள், ஆவணங்கள், சாட்சியம் ஆகியன அளிக்கப்பட வேண்டியது எமது முதலாவது கடப்பாடு.
- தற்போது எம்மிடையே நிலைபெற்றிருக்கும் ஆயுதப் படையினர் எந்த அளவுக்கு எம் நாளாந்த வாழ்க்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றார்கள்; எவ்வாறு எமது வாழ்வாதாரங்களை முடக்கி வைத்துள்ளார்கள்; காணி, கடல் போன்றவற்றில் எவ்வாறு அவர்களின் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது; அவர்கள் கையேற்றிருக்கும் ஏக்கர் காணி எவ்வளவு; அவற்றில் எத்தனை ஏக்கர் காணிகளை அவர்கள் தம் கைவசப்படுத்தி உரிமைப் பத்திரங்களைக் கோருகின்றார்கள் எதற்காக அவர்கள் தொடர்ந்து இங்கிருந்து வருகின்றார்கள் போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கண்டு கணணியில் பதிவு செய்ய வேண்டும்.
- வடக்கு மாகாண சபையை அரசாங்கம் எவ்வாறு முடக்கி வருகின்றது என்பது.
- அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த ஏன் அரசாங்கம் தயங்குகின்றது? அவர்களின் தூர நோக்கு என்ன, இது திடமானதாக இன அழிப்பை நோக்கியே செல்கின்றதா அப்படியானால் சர்வதேச உலகம் இதனைக் கட்டுப்படுத்த அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது பற்றித் திடமான தரவுகளுடன் உறுதியான ஆவணங்கள் தயாரிக்கப்பட வேண்டும். போதுமான விவரங்கள், தரவுகள் அடங்கியவாறான ஆவணங்கள் அடுத்த சில மாதங்களினுள் சர்வதேச உலகின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டால், விசாரணைக்கான விபரங்கள் ஐக்கிய நாடுகள் விசாரணையாளர்களிடம் விரைவில் பாரப்படுத்தப்பட்டால் எமது உள்ளூர் நடவடிக்கைகளில் நாம் உடனே இறங்கலாம் எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் கூறினார்.